சைக்கிள்களை குறி வைத்து திருடும் 60 வயது பலே திருடன்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

சிவகங்கை நகரில் சிறுவர்களின் விலை உயர்ந்த சைக்கிள்களை குறி வைத்து திருடும் 60 வயது பலே திருடன் சைக்கிளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விலை உயர்ந்த சைக்கிள்களை, பெற்றோர்களை தொல்லை செய்து சிறிவர்கள் ஆசையுடன் வாங்குகிறார்கள். புதிய வகையான மாடல்களில் வெளிவரும் இந்த சைக்கிள்களை வாங்கி ஓட்டிச்செல்வதில் இவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. பத்தாயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படும் இந்த சைக்கிள்களை வாங்கும் சிறுவர்கள் தினசரி டியூசன் செல்வதற்கும், கடைத்தெருகளுக்கு செல்வதற்கும் சந்தோசமாக இவற்றை ஓட்டிச் செல்லுகின்றனர்.

டியூசன் சென்டருக்கு செல்லும் மாணவர்கள் சைக்கிள்களை பூட்டி வைத்துவிட்டு செல்கின்றனர். எனினும், சில இடங்களில் ட்யூஷன் முடிந்து அவர்கள் வைத்த இடத்தில் வந்து பார்த்தால் அந்த இடத்தில் ஆசையாக வாங்கிய அவர்களின் விலை உயர்ந்த சைக்கிள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

தங்கள் வீட்டில் தனது சைக்கிள் திருடு போய் விட்ட விஷயத்தை சிறுவர்கள் சொல்லும் போது பெற்றோர்கள் இந்த சிறுவர்களை கடுமையாக கண்டிக்கிறார்கள். இதனால் இவர்கள் மனம் உடைந்து தங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சோர்வடைந்து விடுகின்றனர்.

பெற்றோர்களும் சைக்கிள் திருடு போன சம்பவத்தை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முன் வருவதில்லை. அப்படியே புகார் கொடுக்க சென்றாலும், காவல் துறையினர் உரிய முறையில் புகாரை பெற்றுக் கொள்ளாமல் புகார் கொடுக்க சென்ற அவர்களிடமே கேள்வி மேல் கேள்வி கேட்டு அலைக்கழிப்பதாக சில பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில  தினங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் மிக்க மதுரை முக்கு பகுதியில் போலீஸ் பீட் அருகிலேயே இருக்கும் ஒரு டியூஷன் சென்டரில் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் தனது புதிய சைக்கிளை வெளியே நிறுத்தி சென்றுள்ளார். அப்போது அந்த இடத்தை நோட்டமிட்டு வந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு  நபர் வெகுநேரமாக அந்த சைக்கிளை நோட்டமிட்டு எடுத்து செல்கிறார். இந்த காட்சி அங்கு இருந்த போலீஸ் பீட்  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த நபர் இதுபோன்று மேலும் சில டியூஷன் சென்டர் வாயில்களில் அடிக்கடி வந்து நிற்பதாகவும் சில மாணவர்களின் புதிய சைக்கிள் காணாமல் போயுள்ளதாகவும் இவரின் புகைப்படத்தை பார்த்த சில மாணவர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறை இந்த நூதன திருட்டில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட  சைக்கிள் திருடனை  கைது செய்து மாணவர்களிடத்தில் நிலவும் அச்சத்தை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.