காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டை எதிர்த்து சசி தரூர் போட்டி?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், சசி தரூர் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 22 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. 24 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 30 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும் பட்சத்தில் 17 ஆம் தேதி டெல்லியில் ஓட்டுப்பதிவு நடைபெறும். சுமார் 9 ஆயிரம் பேர் வாக்களிப்பார்கள். 19 ஆம் தேதி வாக்குகள் எண்ணி முடிவு வெளியிடப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியை ஏகமனதாக மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. மல்லிகார்ஜூன கார்கே, அசோக் கெலாட் உட்பட மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை தேர்தலில் போட்டியிட செய்ய தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று ராகுல் காந்தி பிடிவாதமாக கூறி உள்ளார்.

பிரியங்கா காந்தியையும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அவர் தடை விதித்துள்ளார். தங்கள் குடும்பத்தைச் சேராத ஒருவரை தலைவர் பதவியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என, ராகுல் காந்தி கூறி வருகிறார். கடைசி வரை ராகுல் காந்தி தனது மனதை மாற்றிக் கொள்ளாவிட்டால், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை தலைவர் தேர்தலில் களம் இறக்க சோனியா காந்தி திட்டமிட்டு உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடும் பட்சத்தில், ஜி – 23 தலைவர்களின் சார்பில் சசி தரூர் களமிறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கேரள நாளிதழ் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி சசி தரூர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர், தலைவர் தேர்தலில் போட்டி உறுதி என்று சூசகமாக கூறியுள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் சசி தரூர் ஆதரவு திரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. சசி தரூர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் கடும் போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது. அவர் போட்டியிட்டால் சோனியா காந்தி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.