நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்வி, குஜராத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க-வுக்குச் சென்றது, கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் விலகல் எனக் கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்து வந்தது. அந்த வரிசையில், ஆகஸ்ட் 26-ம் தேதி அன்று, காங்கிரஸின் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தும் காங்கிரஸிலிருந்து விலகினார்.
விலகியதோடு ராகுல் காந்தியால் கட்சியில் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாக குலாம் நபி ஆசாத் கூறினார். அதைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்களும் தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், `காங்கிரஸ் இனி தேசிய அளவிலோ, மாநில அளவிலோ இல்லை..!’ விமர்சனம் செய்திருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில் நேற்று கட்சித் தொண்டர்களிடையே பேசிய நட்டா, “நாட்டின் பழைமையான அரசியல் கட்சியான காங்கிரஸ் ஏன் தொடர்ந்து சுருங்கிவருகிறது? ஏன் பலவீனமடைந்துகொண்டே வருகிறது? ஏனெனில் அவர்களிடம், உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான நோக்கங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தற்போது கட்சியைவிட்டு வெளியேருகின்றனர். காங்கிரஸ் கட்சி என்பது வெறும் குடும்பக் கூட்டம் தானே தவிர, தேசிய அளவிலோ, மாநில அளவிலோ இல்லை என்பதை வெளியேறியவர்கள் இப்போது உணர்ந்திருக்கின்றனர்” என்று கூறினார்.
இப்படி காங்கிரஸில் தலைவர்கள் விலகல், பா.ஜ.க-வின் விமர்சனம் எனப் பல நிகழ்ந்து வந்தாலும், கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் காங்கிரஸ் முழுமையாக இறங்கியிருக்கிறது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையும் அக்டோபர் 17-ல் நடத்தக் காங்கிரஸ் முடிவெடுத்திருக்கிறது.