முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரப்பிரதேசத்தில், ஆகஸ்ட் 24-ம் தேதியன்று மதுரா ரயில் நிலையத்தில் பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் 7 மாத குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடந்த ஒருவாரமாகவே தீவிரமாகச் செயல்பட்டுவந்த போலீஸார், கடத்தல் தொடர்பாக பா.ஜ.க பெண் தலைவர், அவரின் கணவர் உட்பட 8 பேரைக் கைதுசெய்திருக்கின்றனர்.
பா.ஜ.க தலைவராக அறியப்படும் வினிதா அகர்வால், அவரின் கணவர் கிருஷ்ணா முராரி அகர்வால் ஆகியோர் ஒரு பெண் குழந்தை இருந்தும், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகத் திருட்டுக் கும்பலிடம் ரூ.1.80 லட்சம் கொடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், ரயில் நிலையத்தில் சாப்பாடு விற்கும் தீப்குமார், குழந்தையைக் கடத்திச் சென்றதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே எஸ்.பி முஸ்டாக் அகமது, “கைதுசெய்யப்பட்ட 8 பேரில், இரண்டுபேர் ஹத்ராஸில் தனியார் மருத்துவமனையை நடத்திவருபவர்கள். மேலும் இரண்டு பேர் துணை செவிலியர்கள். அதோடு இந்த இரண்டு துணை செவிலியர்களும், ஆண் குழந்தை இல்லாத தம்பதிகளைத் தேடுபவர்கள்” என்று கூறினார்.
இந்தச் சம்பவத்தில் பா.ஜ.க தலைவர் கைதாகியிருப்பதையடுத்து மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க-வை விமர்சித்த அகிலேஷ் யாதவ், “குழந்தைகளின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பா.ஜ.க திருடிவிட்டது. இனி குறைந்தபட்சம் இத்தகையை வேலைகளைச் செய்யாதிருங்கள்” என ட்வீட் செய்திருக்கிறார்.