கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்தில் கும்கி யானையாக பணிபுரிந்து வந்த முதுமலை வளர்ப்பு யானை மற்றும் புலியம்பாறை பகுதியில் பிடிபட்ட மக்னா யானை மூர்த்தி ஆகியவை வயது முதிர்வு காரணமாக நேற்றுடன் பணி ஓய்வு பெற்றன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்கத்தில் தற்போது 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஏற்கனவே ஓய்வு பெற்ற அண்ணா, காமாட்சி, பாமா மற்றும் குட்டி யானைகள் உள்ளிட்டவையும் அடங்கும். இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு ஒரு பாகன் (மாவுத்தன்) ஒரு உதவியாளர் (காவடி) இருவர் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 58 வயதான யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவை தொடர்ந்து முகாமிலேயே பராமரிக்கப்படும்.
நேற்றுடன் ஓய்வு பெற்ற முதுமலை யானை இதுவரை கும்கி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. இந்த யானை முதுமலை வனப்பகுதியில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்படுவதால் முதுமலை என பெயரிடப்பட்டுள்ளது. இதேபோல், மக்னா யானை மூர்த்தி கடந்த 1998ம் ஆண்டில் கூடலூர் கோட்டம் புலியம்பாறை பகுதியில் பிடிக்கப்பட்டது. முதுமலை கும்கி யானையானது அப்போதைய வழக்கப்படி சுமார் நான்கு முதல் ஐந்து வயதில் காட்டில் குழி வெட்டி பிடிக்கப்பட்டதாகும். அன்றைய காலக்கட்டத்தில் மரங்களை கட்டி இழுத்து வர முதுமலையில் யானைகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர், அவை கும்கி பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முதுமலை யானை கும்கி பணிகளுக்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் உள்ள குப்பம் பகுதியில் கிராமப் பகுதிகளில் புகுந்து தொந்தரவு செய்த காட்டுயானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட போது சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த யானைக்கு ஆந்திர அரசு சார்பில் சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளை விரட்டும் மற்றும் பிடிக்கும் பணிகளின்போது இந்த யானை மிகவும் தைரியத்துடன் செயல்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல், மக்னா யானை மூர்த்தியும் மூர்க்கமாக இருந்து தற்போது மிகவும் சாதுவாக மாறி உள்ளது. தமிழக, கேரள எல்லைப்பகுதியில் நடமாடிய இந்த யானையிடம் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த யானையை கடந்த 1998ம் ஆண்டில் கூடலூரை அடுத்த புலியம்பாறை பகுதியில் தமிழக வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து முதுமலைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது, பிடிபடும் யானைகளை கொண்டு வருவதற்கான லாரி வசதிகள் இல்லாமல் இருந்ததால் வனப்பகுதி வழியாக சுமார் 10 கி.மீ. கும்கி யானைகள் மூலம் சங்கிலியால் கட்டி இந்த யானையை முதுமலை முகாமிற்கு அழைத்து வந்தனர்.
காட்டு யானைகளை அடக்கும் கிரால் கூண்டில் அடைக்கப்பட்ட மூர்த்தி யானையின் உடலில் பல இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஏற்பட்டிருந்த காயங்களுக்கு பல மாதங்கள் மருந்து அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, காலில் சங்கிலியால் கட்டப்பட்டதால் ஏற்பட்ட காயமும் கால்நடை மருத்துவர் அசோகன் மற்றும் சுகுமாரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் குணப்படுத்தப்பட்டது.
சுமார் 20 வருடங்களாக இந்த யானையின் உருவம் சாந்தமான தோற்றம் மற்றும் அதன் சரித்திரம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த இரண்டு யானைகளுக்கும் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நேற்று முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்றது.
கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணை இயக்குனர் திவ்யா, வனச்சரகர்கள் மனோகரன், விஜய், மனோஜ் குமார், பவித்ரா, வனவர்கள் சந்தனராஜ், காளன், யானை பாகன்கள் கிருமாறன், பொம்மன், காவடிகள் பொம்மன், வாசு மற்றும் வன ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த இரண்டு யானைகளும் ஓய்வு பெற்ற யானைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து முகாமிலேயே பராமரிக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.