தமிழகம் கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக உள்ளது: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னை: கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 
தொடங்கிவைத்தார். உயர்கல்வித்துறை செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கை, உயர்கல்வித்துறையின் தரத்தை உயர்த்துவது, பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, மாநில கல்வி கொள்கை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் தங்கம் தென்னரசு, எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகிய 7 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டனர். துணைவேந்தர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவே தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்படக் காரணமாக உள்ளது.

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காக போட்ட விதையே இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாக காரணம் ஆனது. அனைவருக்கும் கல்வி, தகுதிக்கேற்ற வேலை என்பதே திராவிட கொள்கை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

வேலைவாய்ப்பு தருவது மட்டும் உயர்கல்வியின் நோக்கமல்ல. இப்போதும் உயர்ந்த இடத்தில்தான் இருக்கிறோம். ஆனால் இது போதாது இன்னும் உயர வேண்டும். உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 51% பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும். 

 உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, கற்றல் – கற்பித்தல் போன்றவற்றில் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் சிறப்பாகவே உள்ளன. என்ஐஆர்எஃப் தரவரிசையிலும் நாம் தான் முதலிடத்தில் உள்ளோம். எண்ணிக்கை, தரம் என்ற இரண்டிலும் தமிழ்நாடு உயர்ந்துள்ளது என்பதை என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியல் காட்டுகிறது. வரும் ஆண்டுகளில் என்ஐஆர்எஃப் தரவரிசையில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெறும். 

தமிழ்நாட்டில் உயர்கல்வி சேரும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தரம் குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது. ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்பதே இலக்கு. ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும். 

தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஃபாகல்டி டெவெலப்மண்ட் ப்ரோக்ராம் செயல்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு தேவையான உதவியை வழங்க அரசு தயாராக உள்ளது. மாநில அரசின் கொள்கைகளுக்கேற்பவே பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். 

நீட் தேர்வுக்கு பயந்து அதை நாம் எதிர்க்கவில்லை. உயர்கல்விக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதால் தான் அதை எதிர்க்கிறோம். புதிய தேசிய கல்விக்கொள்கையையும் அரசு எதிர்க்கிறது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே நியமிக்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம் கொடுத்த உரிமையாகும்.

பல்கலைக்கழகங்கள் புதிய பாடங்கள், படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களை கற்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் புதிய பாதையை அமைத்துத்தர வேண்டும். உயர்கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.