கடையம் : கடையம் அருகே கடனாநதி அணையில் கரடி தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் மேல் பகுதியில் பாதுகாக்கப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் வனவிலங்குகள் அணைப்பகுதிக்கு வருவது கிடையாது.
அதற்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகள் வனப்பகுதியிலேயே தாராளமாக கிடைக்கின்றன. கோடைகாலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் குறைந்தால் அணை பகுதிக்கு வந்து வனவிலங்குகள் தண்ணீர் குடித்து செல்கின்றன. இந்நிலையில் தற்போது கரடி ஒன்று அணைப்பகுதியில் நுழைந்து தண்ணீர் குடித்தது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.