பிரதமர் வேட்பாளர்:
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் மோடிதான் எங்களின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துள்ள அமித் ஷா, எம்பி தேர்தலுக்குள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.
என்னதான் பாஜக ஊழலற்ற நேர்மையான ஆட்சி, நிர்வாகம் என்று பேசி வந்தாலும், நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, 100 ரூபாய்க்கு குறையாத பெட்ரோல் விலை, 1,100 ரூபாயை தாண்டி போய் கொண்டிருக்கும் சமையல் காஸ் சிலிண்டர் விலை என , மக்கள் மன்றத்தில் எடுத்த சொல்ல மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக விஷயங்கள் இல்லாமல் இல்லை.
பலவீனமான காங்கிரஸ்:
ஆனால், மக்களை பாதிக்கும் அன்றாட பிரச்னைகள் தொடங்கி தேசம் சந்தித்துவரும் பொருளாதார சிக்கல்கள் வரை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான சக்தி இப்போதுவரை காங்கிரஸுக்கு இருப்பதாக தெரியவில்லை. மாறாக அக்கட்சியின் மூத்த தலைவர்களான கபில் சிபல், குலாம் நபி ஆசாத் என ஒவ்வொருவராக கழன்று கொண்டிருக்கின்றனர். இப்படி காங்கிரஸ் நாளுக்குநாள் பலவீனப்பட்டு வரும் காரணத்தால்தான், 2024 நாடாளுமன்ற மக்கவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான மூன்றாவது அணி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தேசிய அரசியலில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
நிதீஷ் மீது குவியும் பார்வை:
மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியின் ஆட்சியை கவிழ்க்க முயன்ற பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அண்மையில் வெற்றிகரமாக முறியடித்துள்ளதையடுத்து, 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு நிதீஷுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டு வருகிறது. இந்த பின்னணியில்தான், பிரதமர் மோடியை வெளிப்படையாக எதிர்த்துவரும் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் நாளை பிகாருக்கு சென்று நிதீஷ் குமாரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேசிய அளவில் பிரபலம்:
பிரதமர் மோடி அளவுக்கு தேசிய, மாநில அரசியலில் அனுபவம் மிக்கவர் என்ற முறையில் எதிர்க்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு நிதீஷ் குமார் தகுதியான நபர்தான் என்றாலும், பிகாரை தாண்டி, மோடி அளவுக்கு அனைத்து மாநில மக்களுக்கும் நிதீஷ் குமாரை தெரியுமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதேபோன்றுதான் நிதீஷ் குமாருக்கு பதிலாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட யஷ்வந்த சின்ஹாவோ, அரவிந்த் கெஜ்ரிவாலோ, மம்தா பானர்ஜியோ பொது வேட்பாளாராக யார் நிறுத்தப்பட்டாலு்ம் அவர்கள் மோடியின் பிரபலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு தேசிய அளவில் மக்களுக்கு நன்றாக தெரிந்த தலைவர்களாக இல்லை என்பது மிகப்பெரிய குறையாகவே உள்ளது.
இத்தகைய சூழலில், குடியரசுத் தலைவர் தேர்தலை போன்று, 2024 எம்பி எலக்ஷனிலும் ஒரு வேளை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து பொது வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் மோடி என்ற ஒற்றை பிம்பத்தை முன்னிறுத்தி பாஜக வெற்றிப் பெற அதுவே காரணமாக அமைந்துவிடலாம்.
மாநிலங்களில் பாஜகவை வீழ்த்த வேண்டும்:
அதற்கு பதிலாகடெல்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், பிகாரில் மதசார்பற்ற ஜனதா தளம், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆநதிராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், தமிழ்நாட்டில் திமுக என மாநில அளவில் வலுவாக உள்ள கட்சிகள் தாங்கள் ஆட்சி புரியும் மாநிலங்களில் பாஜகவை மொத்தமாய் வீழ்த்தும் முயற்சிகளை முன்னேடுப்பதே, 2024 இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்கான சரியான அணுகுமுறையாக இருக்கும்.
அப்போதுதான் தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெறும் இடங்களை பொறுத்து, அதன் தலைமையில் ஆட்சி அமைப்பதா அல்லது எதிர்க்கட்சிகளில் அதிக இடங்களை வெல்லும் கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைப்பதா அல்லது தனியொரு கட்சியாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் நிவையில் அக்கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதா என்பன போன்ற வாய்ப்புகள் மாநிவ கட்சிகளுக்கு கிடைக்கும் என்கின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.