விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 2022-ம் ஆண்டு வரையிலான ரூ.13.80 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட்டில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ரங்கசாமி பேசியது: ”எம்ல்ஏக்கள் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். நிர்வாகத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தொடர்கிறது. அதை களைந்து புதுவையை வளர்ச்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம். உறுப்பினர்களின் கோரிக்கைகளை எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் செய்ய முடியுமா என பார்க்க வேண்டும். அவர்கள் திருப்தி அடையும் வகையில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்.

மார்ச்சில் பட்ஜெட் சமர்ப்பித்தால் நன்றாக இருக்கும். அதிக நாட்கள் பேரவை நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கூறினர். வரும் காலத்தில் மார்ச்சில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தவேண்டும் என்பதே அரசு எண்ணம். மத்திய அரசும் இதை அறிவுறுத்தியுள்ளனர். நிச்சயம் மார்ச்சில் கூட்டத் தொடர் நடத்தப்படும். மத்திய அரசிடம் புதுவைக்கு தேவையான கூடுதல் நிதியைக் கேட்டுள்ளோம். வரும் டிசம்பருக்குள் நிதியை முழுமையாக பயன்படுத்தினால் கூடுதல் நிதி தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தலைமைச் செயலர், செயலர்கள், அதிகாரிகள் அனைவரும் கோப்புகளில் கவனம் செலுத்தினால் மாநிலம் வளர்ச்சி அடையும்.

தேவையற்ற கேள்வி கேட்டு காலம் கடத்துவதை விட தேவையான கேள்விக் கேட்டு விரைவாக செயல்பட்டால் மாநிலம் வளர்ச்சி பெறும். கடந்த கால குறைகளை மறந்து வளர்ச்சியில் அக்கறை எடுத்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். நாம் அனைவரும் நல்ல வளர்ச்சி காணவேண்டும். புதுவைக்கு சட்டப்பேரவை கட்ட வேண்டும். பழமையான கட்டடத்தில் நடக்கிறது. புது கட்டிடம் எங்கு கட்டுவது என்பதில் சிறு ஆலோசனை உள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்குவோம். 10 ஆண்டுகள் பணி செய்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பளம் இல்லாத நிலை நீக்கப்படும்.

விவசாயத்தைப் பொறுத்தவரை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 2022-ம் ஆண்டு வரையிலான ரூ.13.80 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவுத்துறை சங்கங்கள், சர்க்கரை ஆலை, நிறுவனங்கள் சிரமமான நிலையில் உள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்துவதில் சிரமம் உள்ளது. எத்தனால் ஆலை போடலாம் என்றால் அந்த பகுதி மக்கள் எதிர்த்தனர்.

தற்போது மக்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். தனியார் பங்களிப்புடன் விரைவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படும். அமுதசுரபி, கான்பெட், பாண்டெக்ஸ் நல்ல நிலையில் சிறந்த முறையில் சேவை செய்தது. தற்போது ஊதியம் தரமுடியாத நிலையில் உள்ளது. ரூ.30 கோடி ஒதுக்கி தந்து இவற்றை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏஎப்டி, சுதேசி, பாரதி மில்கள் நலிநடைந்துள்ளது.

அதன் தொழிலாளர்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்ல முடிவு எடுத்து ஆலைகளை செயல்படுத்துவோம். இதனால் படித்த இளையோருக்கு வேலை தர இயலும். பட்ட மேற்படிப்பு, சென்டாக் உதவித் தொகை வழங்கப்படும். மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தொகுதி வளர்ச்சிக்கு தொகுதி தோறும் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்படுவர். மரபணு குறைப்பாடு உள்ள குழந்தைகளின் பராமரிப்பு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும். என்ஆர்எச்எம் ஊழியர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு டீசல் லிட்டருக்கு ரூ.12 மானியம் தரப்படும்.

கட்டிட நல வாரியம் வழங்கி வரும் திருமண உதவித்தொகை ரூ.7 ஆயிரம் என்பது ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மகப்பேறு உதவி ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஈமச்சடங்கு நிதி ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாகவும், மருத்துவ உதவித்தொகை ரூ.500ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதய பிரச்சினை உள்ளோருக்கு ரூ.1 லட்சமும், சிறுநீரக பிரச்சினை உள்ளோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

கட்டிட தொழிலாளர் நல வாரிய பயனாளிகளின் பிள்ளைகள் 1 முதல் 8 வரை ஆண்டுக்கு ரூ.1000, 9,10ம் வகுப்புகளுக்கு, ரூ.1,500, 11,12ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆட்டோ நலவாரியம் அமைக்கப்படும். முதியோர் உதவித்தொகை 70 முதல் 80 வயது வரை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவர். நகராட்சி, கொம்யூன் ஊழியர்களுக்கு ஊதியம் அரசே தரவேண்டியுள்ளது. இதுகுறித்து கலந்து பேசி, கமிட்டி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சம்பளம் தரமுடியாது என சொல்லவில்லை. எனவே, அவர்கள் போராட்டத்தை திரும்ப பெறவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.