அதிமுக: பாக்யராஜின் திடீர் வருகை… ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் உறவில் மாற்றத்தை கொண்டுவருமா?!

இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னையில் கூட சமாதானம் ஏற்பட்டுவிடும் போல, ஆனால், எடப்பாடி – பன்னீர் இடையிலான பிரச்னை முடிவுக்கு வர இன்னும் ஒரு யுகங்கள் வேண்டுமோ என்கிற அளவுக்கு முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் தான் பன்னீர் செல்வம் ஆகஸ்ட் 18-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

பன்னீர் செல்வம்

அப்போது, “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடக்கப்போவது நல்லவையாக இருக்கட்டும். மீண்டும் ஒன்றுபட்டு ஆட்சியைப் பிடிப்பதே நோக்கமாக இருக்கட்டும். சகோதரர் எடப்பாடியும், நானும் ஒன்று சேர்ந்து சிறப்பான பணிகளைச் செய்தோம். எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகளால் அ.தி.மு.க-வுக்குள் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. கூட்டுத்தலைமையாகச் செயல்படுவோம். கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க-வின் வெற்றியே பிரதானம் என்று செயல்படலாம்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

பன்னீர் அழைப்பு விடுத்த சில நிமிடங்களிலேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி, “அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார், தர்மயுத்தம் சென்றார். யார் அழைத்துச் சென்றார்? அவருக்குப் பதவி வேண்டும். பதவியில்லாமல் இருக்க முடியாது. குடும்பத்திலிருப்பவர்கள் பதவி பெற வேண்டும். மகன் எம்.பியாகி மந்திரியாக வேண்டும். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை.

 எடப்பாடி

ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 2017-ல் எப்படிக் கூட்டப்பட்டதோ அதேபோலத்தான் இப்போதும் கூட்டப்பட்டது. அவர் அங்கே வந்திருக்க வேண்டும். மாறாக அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இப்படிச் செயல்பட்டால், அவரோடு எப்படிச் செயல்பட முடியும்.

ஓ.பி.எஸ்-பாக்யராஜ் சந்திப்பின் போது

சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அனைத்துப் பொறுப்பார்களும் என்னை முதல்வராக அறிவிக்கிறார்கள். ஆனால், இவர் ஏற்க மறுத்தார். 15 நாள் தொலைக்காட்சிகளில் விவாதமானது. இதனால் 3 சதவீத ஓட்டில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். இப்படியிருந்தால் கட்சியை எப்படி பொதுமக்கள் ஏற்பார்கள்? அதனால்தான் ஒற்றைத் தலைமை வேண்டுமெனக் கேட்கப்பட்டது. தி.மு.கவோடு தொடர்பில் இருக்கிறார்” எனக்கூறி பன்னீரின் அழைப்பை எடப்பாடி ஏற்க மறுத்தார்.

பாக்யராஜ்

இந்தச்சூழலில் தான் கடந்த 26-ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் பன்னீர் செல்வத்தை இயக்குநர் பாக்யராஜ் சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. சந்திப்பிற்குப் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாக்யராஜ், “தமிழக மக்களின் நலனை நினைத்துத் தான் புரட்சித்தலைவர் அ.தி.மு.க-வை ஆரம்பித்தார். அவர் கடைசி வரையில் மக்களுக்கு நல்லதே செய்தார். அதற்குப் பின்னர், ஜெயலலிதாவும் கட்சியை வழிநடத்திச்சென்றார். அ.தி.மு.க நல்ல பெயரோடு மக்களிடம் இருந்தது. நடுவில் திருஷ்டி பரிகாரம் போல் கட்சிக்குச் சிறிய சோதனை வந்துள்ளது.

இது சரியாகி கட்சி எப்படி இருந்ததோ அதுபோல மீண்டு வரும். அந்த எண்ணத்தில் தான் பன்னீர் செல்வம் அனைவரும் ஒருங்கிணைத்துப் போக வேண்டும் எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார். மேலும், எல்லாரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் என்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டு செயல்படத் தயாராக இருக்கிறேன். எம்.ஜி.ஆரின் பெயரையும், கட்சியையும் காப்பாற்ற ஒரு தொண்டனாக நான் எல்லா பணிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன். எல்லாரும் ஒன்று சேர்வார்கள். எல்லாமே நல்லபடியாக நடக்கும். இதற்குக் கொஞ்சம் நேரம் எடுக்கும். எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து இணைப்பு குறித்துப் பேசுவேன்” என்றார்.

அ.தி.மு.க- ‘இரட்டை இலை’

பாக்யராஜின் திடீர் வருகை குறித்து பன்னீர் ஆதரவாளர்கள் தரப்பில் விசாரித்தோம், “பாக்யராஜ் வந்தது சில மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியும். 30 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பில், இரு தரப்பும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என பாக்யராஜ் வலியுறுத்தினார். நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். எடப்பாடி தான் அடம்பிடிக்கிறார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். சரி..அவரிடமும் நான் பேசுகிறேன் என்று பாக்யராஜ் கூறினார். இருவரும் ஒன்றிணைந்தால் தான் கட்சி கட்சியாக இருக்கும். இல்லையேல் மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு இருக்கும் நன்மதிப்பு குறைந்துவிடும் என்று பேசப்பட்டது” என்றனர். பாக்யராஜின் சந்திப்பு பா.ஜ.க-வின் சில மூத்த நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் பேரிலே நடந்தது என்றும் கூறப்படுகிறது. இந்தசூழலில், பன்னீரைச் சந்தித்த பாக்யராஜ் ஓரிரு நாள்களில் எடப்பாடியையும் சந்திக்க உள்ளாராம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.