நாளை (31-ந்தேதி) கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களிலும், வீடுகளிலும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு அதிக அளவில் பூக்களை வாங்கி அபிஷேகம் செய்வது வழக்கம்.
இதனால், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை மார்க்கெட்டுகளுக்கு பூக்கள் வரத்து சற்று குறைவாகவே காணப்படுகிறது.
தற்போது தேவை அதிகம் என்பதால் பொதுமக்களின் ஆர்வத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்தும் மதுரைக்கு வியாபாரிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மாட்டுத்தாவணியில் உள்ள மொத்த மலர் வணிக சந்தையில் பூக்களை வாங்குவதற்கு இன்று ஏராளமானோர் திரண்டனர். அங்கு கூட்டம் அலைமோதியதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் வரை 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மதுரை மல்லிகை இன்று 4 மடங்கு அதிகரித்து 1800 முதல் 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று 800 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம் 500 ரூபாயாக இருந்த முல்லைப் பூவின் விலை இன்று ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதுபோல சம்பங்கி, செண்டு, பட்டர் ரோஸ், அரளி, அருகம்புல், மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனாலும், பொதுமக்கள் அதிகளவில் மார்க்கெட்டுக்கு வந்து விதவிதமான மலர்களை வாங்கி சென்றனர். இதனால் மதுரை மாட்டுத்தாவணி மலர் வணிக வளாகம் களை கட்டியது. இன்றும், நாளையும் 100 டன்களுக்கு மேல் பூக்கள் விற்பனை இருக்கும் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.