நடிகை அமலா பாலுக்கு மனரீதியாக தொந்தரவு கொடுத்தது மட்டுமில்லாமல் தொழில் தொடங்கலாம் எனக் கூறி பண மோசடி செய்த வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர்.
நடிகை அமலா பாலுக்கு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே சொந்த வீடு உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் திரைப்படத் தொழில் தொடங்குவது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவிந்தர் சிங் தத் என்ற ஆண் நண்பருடன் நடிகை அமலாபாலுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், 2018-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள பெரியமுதலியார் சாவடியில் இருவரும் வீடு ஒன்றை எடுத்து தங்கி திரைப்படத் தொழில் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நடிகை அமலா பாலும், அவர் ஆண் நண்பரும் பிரிந்திருக்கின்றனர். இந்த நிலையில், ‘இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவேன்’ என பவிந்தர் சிங் தத் மற்றும் அவர் உறவினர்கள் நடிகை அமலா பாலை ஏமாற்றி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதே காரணத்தை வைத்து தன்னிடமிருந்து 23 லட்சம் பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து, மனரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், தொழில்ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை அமலா பால் தரப்பில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 15 பக்கங்கள் கொண்ட புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியை சேர்ந்த பவிந்தர் சிங் தத்தை செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர் உட்பட 12 பேர் மீது காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மீதமுள்ள 11 பேரை தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.