"இதற்கு மேலும் நான் என்ன செய்ய வேண்டும்?"- இந்தியா A வாய்ப்பு கிடைக்காதது குறித்து பாபா இந்திரஜித்

தமிழக கிரிக்கெட் அணியை பின் தொடர்ந்து வரும் ஒவ்வொரும் நன்கு அறிந்த பெயர் பாபா இந்திரஜித். இந்தாண்டு நடந்த ரஞ்சி கோப்பையில் தமிழக அணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டவர் என்றால் அது இவர்தான். இந்நிலையில் செப்டம்பர் மாதம் இந்தியா A அணி நியூசிலாந்து A அணியுடன் விளையாட உள்ளது. ஆனால் அந்த அணியில் இந்திரஜித்திற்கு இடம் கிடைக்காதது ஒரு பேசுபொருள் ஆகியுள்ளது. இதுகுறித்து அவரிடம் பேசும்போது…

நீண்டகாலமாக ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறீர்கள்? எப்படி இருக்கு?

“தமிழ்நாடு அணிக்கு விளையாடுவது நன்றாக இருக்கிறது. இந்தியாவுக்காக ஆடுவதற்கு முதல்படி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள்தான். அதில் சிறப்பாக விளையாடினால்தான் இந்திய அணிக்கு விளையாடமுடியும். இப்போது நான் விளையாட ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. இது ஒரு அழகான பயணம்.”

நடந்து முடிந்த ரஞ்சி தொடரில் நீங்கள்தான் தமிழ்நாடு அணிக்கு அதிக ரன்கள் அடித்தீர்கள்… அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

“நான் விளையாடிய ரஞ்சி தொடர்களில் இதுவே என் மனதுக்கு நெருக்கமான தொடர். கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ரஞ்சி போட்டிகள் நடக்கவில்லை. அதன்பின் இந்தாண்டு குறுகிய காலத்தில் வெறும் மூன்று லீக் போட்டிகள்தான் இருந்தன. தொடர்ந்து எல்லா ஆண்டுகளும் சிறப்பாக விளையாடி வந்தாலும், இந்தாண்டு நடந்த மூன்றே போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லா காலங்களிலும் நம்மால் மூன்று போட்டிகளில் மூன்று சதம் அடித்துவிட முடியாது!”

பாபா இந்திரஜித்

தமிழக அணியில் தொடர்ந்து இடம்பெற்றாலும் சர்வதேச அளவில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது இந்திய A அணியிலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை… எப்படி உணர்கிறீர்கள்?

“கண்டிப்பாகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நாம் தொடர்ந்து சிறப்பாக விளையாடாமல் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஒருநாளும் வருத்தப்படமாட்டோம். ஐ.பி.எல் வாய்ப்பு கிடைத்தது ஒரு பக்கம் மகிழ்ச்சி. எனக்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடவேண்டும் என்பது பெரிய ஆசை. ஒயிட் பால் கிரிக்கெட்டில் கூட நான் சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாட முடியவில்லை. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஒரு போட்டி விடாமல் விளையாடி கொண்டிருக்கிறேன். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு ஏற்ப ரன்களைக் குவித்துள்ளேன். முன்பு சொன்னதுபோல் இந்தாண்டு ரஞ்சி தொடரும் எனக்குச் சிறப்பாக அமைந்தது. இப்படியிருக்கும் சூழலில் கண்டிப்பாக இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றே நினைத்தேன். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய A அணியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. ஒழுங்காக விளையாடாமல் வாய்ப்பு கிடைக்காதது வேறு… ஆனால் சிறப்பாக விளையாடி வாய்ப்பு கிடைக்காதது வருத்தமளிக்கிறது. இதற்கும் மேல் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. மீண்டும் முதலிலிருந்து ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடி வாய்ப்புக்காக காத்திருப்பது எளிதான காரியம் அல்ல. அது ஒரு பெரிய பயணம்!”

அபராஜித்திற்கு ஐ.பி.எல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் உங்களை டெஸ்ட் வீரராகத்தான் பலரும் பார்த்தனர். அதை உடைத்து இந்தாண்டு ஐ.பி.எல்-க்குத் தேர்வானது எப்படி?

“என்னை ஒரு டெஸ்ட் வீரராகத்தான் பார்க்கிறார்கள் என்பது எனக்கும் தெரிந்துவிட்டது. எல்லா வீரர்களுக்குமே மூன்று ஃபார்மேட்களிலும் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். என்னை பார்ப்பவர்கள் டெஸ்ட் பிளேயராக உணர்ந்தாலும் நான் என்னை மூன்று ஃபார்மேட் வீரராகத்தான் பார்த்தேன். அந்த பிம்பத்தை உடைக்க நான் இன்னும் அதிகாமாக உழைக்கத் தொடங்கினேன். இதற்காக, சத்தமில்லமால் பெங்களூரு சென்று பயிற்சியாளர் ஆர்.எக்ஸ்.முரளியிடம் பயிற்சி மேற்கொண்டேன். அங்குக் கற்றுக்கொண்டதை வைத்து கடந்த ஆண்டு டி.என்.பி.எல்லில் சிறப்பாக விளையாடினேன். இருப்பினும் என்னை சையத் முஷ்தக் அலி கோப்பைக்கான தமிழக அணியில் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் அதன்பின் விஜய் ஹசாரே கோப்பையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ட்ரையல்ஸிலும் நன்றாக விளையாடினேன். அதன் மூலம் எனக்கு ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இது என் உழைப்புக்குக் கிடைத்த பலன்!”

பாபா அபராஜித், பாபா இந்திரஜித்

ஒருபக்கம், இளம் வயதினர் இந்தியாவுக்குத் தேர்வாகிறார்கள். மற்றொரு பக்கம், தினேஷ் கார்த்திக்கின் கம்பேக்! இப்போ உங்களுக்கு 28 வயது… உங்கள் பார்வையில் கிரிக்கெட்டுக்கும் வயதுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?

“இப்போதெல்லாம் இளம் வயதிலேயே ஐ.பி.எல் வாய்ப்பு கிடைத்து, மிக விரைவில் இந்திய அணிக்கு ஆடிவிடுகின்றனர். அது ஆரோக்கியமானதுதான். ஆனால், அதே சமயம் வயது, கிரிக்கெட் விளையாட ஒரு தடையாக இருக்கக்கூடாது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தினேஷ் கார்த்திக். எனக்கு ரொம்ப நெருக்கமானவர் தினேஷ் கார்த்திக். அவரைப் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு நம்பிக்கை கிடைக்கிறது. 37 வயதில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் உலகக் கோப்பை ஆட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. பெரிய அளவில் ஆட வேண்டும் என்ற ஆசையும் அதற்கான உடற்தகுதியும் இருக்கும் போது தேர்வாவதற்கு வயது நிச்சயம் தடையாக இருக்காது.”

ஐ.பி.எல்-லில் விளையாடினால் விரைவில் மக்களிடம் சென்றடைகிறார்கள். ஆனால், பல வருடங்கள் ரஞ்சியில் விளையாடினாலும் அது நடப்பதில்லை. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“எனக்கு புகழ் கிடைக்கவில்லை என்பது பிரச்னை இல்லை. கிடைக்க வேண்டிய அங்கீகாரமே கிடைக்கவில்லை என்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. பத்து ஆண்டுகள் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு ஆட முடியவில்லை என்பதே என் வருத்தமே தவிர, புகழ் கிடைக்காததில்லை. ஐ.பி.எல்லில் பத்து நிமிடங்கள் சிறப்பாக விளையாடினாலும் புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஐ.பி.எல்-லில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு ஒயிட் பாலில் இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம். அதே சமயம், இந்திய டெஸ்ட் அணியில் ஐ.பி.எல்-லில் நன்றாக விளையாடியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதும் ரஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததும் சரி அல்ல!”

பாபா இந்திரஜித்

தமிழக அணியைப் பொறுத்தவரை ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினாலும் டெஸ்ட் ஃபார்மேட்டான ரஞ்சியில் மோசமான நிலையே தொடர்கிறது. இதற்கு என்ன காரணம்?

“இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. முதலில் டி.என்.பி.எல் போன்றவற்றை பயன்படுத்தி ஒயிட் பாலில் நாம் சிறப்பாக விளையாடுகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் வேறு மாதிரியான திறன்கள் வேண்டும். ரஞ்சி போட்டிகள் பெரும்பாலும் பனிக்காலங்களில்தான் நடக்கும். அதில் பந்து நல்ல சீம் ஆகும். அதற்கேற்ப பேட்டிங் ஆடவேண்டும். பௌலிங் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் எடுக்க நிறைய வேகபந்து வீச்சாளர்கள் தேவை. இதையெல்லாம் தாண்டி முதலில் டெஸ்ட் கிரிக்கெட் ஆட இளைஞர்களுக்கு ஆசை இருக்க வேண்டும். ஐபிஎல்-லில் ஆடுவதுதான் பலரது கனவாக இருக்கிறது. அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தசுற்றுக்குத் தகுதி பெற்றால் என்ன? தகுதிபெறாவிட்டால் என்ன?’ என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது.

இந்திய டெஸ்ட் அணியில் ஆட ஆசை இருந்தால் நிச்சயம் ரஞ்சியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை தானாக வரும். இதை நான் தமிழகத்தை வைத்து மட்டும் சொல்லவில்லை. உலகம் முழுக்க டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலை இப்படியாகத்தான் இருக்கிறது. தமிழகம் பெரிய மாநிலம், அப்படி இருந்தும் நாம் ரஞ்சியில் மோசமாக விளையாடுகிறோம் என்றால் நாம் எங்கேயோ தவறு செய்கிறோம் என்பதை நிச்சயம் ஒப்புக்கொண்டாக வேண்டும். அதை உணர்ந்து அதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும். அப்போதுதான் தொடர்ந்து ஒயிட் பால் கிரிக்கெட் போல் ரஞ்சியிலும் சிறப்பாக தமிழகம் விளையாட முடியும். இதில் சில விஷயங்கள்தான் வீரர்களின் கையில் இருக்கின்றன. மற்றவை அவர்கள் கையிலேயே இல்லை!”

டி20 லீக் போட்டிகள்தான் வருங்காலம் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து?

“இதை மக்கள் முடிவு செய்யும் ஒரு விஷயாமாகத்தான் நான் பார்க்கிறேன். மக்கள் பெரும்பாலும் டி20 போட்டிகளைத்தான் விரும்பி பார்க்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளை வெகு சிலர்தான் முழுநேரமும் பார்க்கிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது பத்து ஓவர் போட்டிகளெல்லாம் வரத்தொடங்கிவிட்டன. அதனால் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புண்டு. டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும் என்று பலர் கூறினார்கள். ஆனால், இப்போது 50 ஓவர் கிரிக்கெட்தான் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் விறுவிறுப்பாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது குறுகிய ஓவர் போட்டிகளுக்கே மதிப்பு அதிகமாக இருக்கிறது. பல வீரர்களும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். அதனால், மக்கள் அதை விரும்பும்போது கண்டிப்பாக டி20 போட்டிகள் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.”

பாபா இந்திரஜித்

ஐ.பி.எல்லில் முதல் முறையாக இந்தாண்டுதான் தேர்வு செய்யப்பட்டீர்கள். அந்தத் தருணம் எப்படி இருந்தது?

“ரொம்ப காலமாக என்னை டெஸ்ட் வீரர் என்று கூறியதை மனதில் வைத்து வெறித்தனமாக உழைத்தேன். யாருமே நான் ஐ.பி.எல் ஆடுவேன் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். விஜய் ஹசாரே வாய்ப்பைப் பயன்படுத்தியது, அதன் மூலம் கிடைத்த கொல்கத்தா அணி ட்ரையல்ஸை பயன்படுத்தியது என்று எல்லாம் எனக்குச் சாதகமாக அமைந்தது. எல்லாருக்குமே ஐ.பி.எல் ஆட விருப்பம் இருக்கும். 19, 20 வயதில் ஐபிஎல் விளையாடுபவர்களை எல்லாம் பார்க்கும் போது 10 ஆண்டாக ஆடும் நம்மால் அங்கு விளையாட முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கும். தமிழக டி20 அணியில் என்னை தேர்ந்தெடுக்காத போதும் ஐ.பி.எல் ஆடியது பெருமையாக இருந்தது. நீண்ட நாள் காத்திருப்பு எதிர்பார்க்காத நேரத்தில் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி!”

தோனியைச் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துகொண்டீர்கள். அவர் என்ன சொன்னார்?

“நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். சின்ன வயதில் சச்சின் பிடிக்கும். ஆனால், அதற்குப் பிறகு தோனிதான். இந்த முறைதான் எனக்கு தோனியிடம் தனியாகப் பேச வாய்ப்பு கிடைத்தது. போட்டி முடிந்ததும் எல்லோருக்கும் கைகொடுத்து வாழ்த்துகள் சொல்வது வழக்கம். ஆனால், தோனி என்னிடம் ‘எப்படி இருக்க?’ என்று கேட்டார். இந்த முறை தயக்கம் இன்றி பேசிவிடலாம் என்று அவரிடம் சென்றதும் 20 நிமிடங்கள் என்னுடன் பேசினார். கீப்பிங் மற்றும் பேட்டிங் தொடர்பான என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டேன். அவ்வளவு ஆர்வமாக நான் கேட்டதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளித்தார். பெரிய வீரர் என்ற எண்ணமே இல்லாமல் சாதாரணமாக இருப்பவர் அவர். அவர் சந்தித்த கஷ்டங்கள் பற்றியும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘உன்னை கேலி செய்து சிரிப்பவர்களுடன் பயிற்சி செய்யாதே’ என்ற அறிவுரையை வழங்கினார். அவரது வார்த்தைகள் ஒருவித நம்பிக்கையை என்னுள் விதைத்தன. அன்று ஹோட்டல் அறைக்குச் சென்ற உடனே அவர் கூறியதை எல்லாம் மறந்துவிடக்கூடாது என்று சொன்னதையெல்லாம் எழுதி வைத்துவிட்டேன். வாழ்வில் மறக்க முடியாத 20 நிமிடங்கள் அவை!”

மனரீதியான பிரச்னைகள் குறித்து பல முன்னணி வீரர்களும் இப்போது மனம் திறந்திருக்கிறார்கள். இதில் உங்கள் கருத்து என்ன?

“நிச்சயம் இது பெரிய விஷயம்தான். வாழ்வில் எல்லாமே மனதுடன் தொடர்புடையதே. நாம் வெவ்வேறு இடங்களில் பல பிரச்னைகளைச் சந்திக்கிறோம். ஆனால், சமூக கட்டமைப்பின் காரணமாய் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கடந்து விடுகிறோம். இதனால் தொடர்ந்து கஷ்டத்திலேயே வாழ்வது சாதாரணம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறோம். தற்போது இருக்கும் உலகத்தில் சமூக வலைதளங்களில் வரும் கருத்துகள் தெரிந்தோ தெரியாமலேயே நம்மை நிச்சயம் பாதிக்கின்றன. மனரீதியாக தினமும் நம்முடன் நாமே போராடிக்கொண்டேதான் இருக்கிறோம். மனரீதியாகச் சிறப்பாக இருந்தால் மட்டுமே நம்மால் எந்த விளையாட்டாக இருந்தாலும் சிறப்பாக விளையாட முடியும். கண்டிப்பாக உதவி தேவைப்படும் போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி யோசிக்காமல் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். மன ஆரோக்கியமும் அனைவருக்கும் ரொம்பவே முக்கியம். அதற்காக தற்காலிக ஓய்வு எடுப்பதையும் உதவி கேட்பதையும் தவறாகப் பார்க்கும் மனநிலை மாற வேண்டும்.”

உங்கள் வருங்கால ஆசை என்ன?

“ஐ.பி.எல்-லில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. அடுத்தபடியாக அங்கு நன்றாக விளையாடி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசை. கீப்பராக மாறி என் விளையாட்டில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன். இன்னும் ஒரு 10-12 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை என்னிடம் இருக்கிறது. அதற்குள் இந்தியாவுக்கு ஆடவேண்டும் என்பது என் லட்சியம். தமிழ்நாடு அணியை ரஞ்சி கோப்பை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. எல்லாமே கைக்கூடும் என நம்புவோம்!”



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.