2002 குஜராத் கலவரம் தொடர்பான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.
2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்குகள் சில இன்றும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்த மனு, குஜராத் காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட மனு, இழப்பீடுகள் கோரி தொடரப்பட்ட மனு என ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்திலும் நிலவையிலிருந்து வந்தது. இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டன எனக்கூறிய தலைமை நீதிபதி, பல்வேறு விவகாரங்கள் குறித்து விசாரிப்பதற்காக 10 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதில் 9 நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள ஒன்று கூட இறுதிக்கட்ட விசாரணை நிலையில் இருக்கின்றது. எனவே இந்த வழக்குகளை மேற்கொண்டு விசாரிப்பதில் நீதிமன்றத்தின் பங்கு எதுவும் இல்லை எனக் கூறிய தலைமை நீதிபதி, வழக்குகளை முடித்து வைப்பதாக உத்தரவிட்டார். மேலும் மனுதாரர்களுக்கு விவகாரத்தில் ஏதேனும் நிவாரணம் தேவை என்றால் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் அணுக வாய்ப்பு வழங்குவதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை – மடாதிபதி மீது பாய்ந்த போக்சோSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM