திருவனந்தபுரம்; ஆம்புலன்சின் கதவு கதவைத் திறக்க முடியாமல் ஏற்பட்ட தாமதத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு 66 வயதான கோயமோன் உணவகத்தில் இருந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சாலையைக் கடக்கும்போது, இருசக்கர வாகனம் மோதியது. அவர் உடனடியாக அருகிலுள்ள கடற்கரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அருகே உள்ள கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லப்பட்டார். ஆனால், அவரை அழைத்து வந்த ஆம்புலன்சின் கதவு திறக்கப்படாமல் போனதால் கடும் அவதிப்பட்டனர். மேலும் காயமடைந்த நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பிறகு, பல முயற்சிகள் செய்த போதிலும், ஆம்புலன்ஸின் கதவு திறக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட பொது மக்கள் நோயாளியை வெளியே கொண்டு வர தங்களால் இயன்றவரை முயற்சி செய்தனர், ஆனால் முடியவில்லை.
இந்த நிலையில் முயற்சியைக் கைவிடாமல் சுமார் 30 நிமிடங்கள் போராடி கதவை உடைத்தனர். கோடரியைப் பயன்படுத்தி கதவை உடைத்த பின்னரே அது திறக்கப்பட்ட நிலையில் நோயாளியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவ மனையில் உள்ள வாகனங்களை ஆய்வு செய்து முறையான பராமரிப்பில் வைக்கவேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.