ஹரியானா மாநிலத்தின் குருகிராமிலுள்ள `தி க்ளோஸ் நார்த்’ சொசைட்டி குடியிருப்பில் வசித்து வருபவர் வருண்நாத். இவர் தான் வசித்து வரும் 14-வது மாடியிலிருந்து தரை தளத்துக்கு லிஃப்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லிஃப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றுவிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வருண் இன்டர்காம் மூலம் பாதுகாவலர் ஒருவரை தொடர்பு கொண்டு கதவை திறக்குமாறு தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, உடனடியாக பாதுகாவலர் ஆபரேட்டருடன் விரைந்துவந்து, வருணை ஐந்து நிமிடங்களில் பத்திரமாக மீட்டார். கோபத்துடன் வெளியே வந்த அவர் லிஃப்ட் ஆபரேட்டரை தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், பாதுகாவலரை தாக்கிய வருண்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பாதுகாவலர்கள் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருண்மீது காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்தனர். மேலும் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.