NCRB இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதில், 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டில், இந்தியாவில் தற்கொலை 6.1 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் வருமானமின்றி பல குடும்பங்கள் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள் மத்தியில் தற்கொலை மரணங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பதும், விவசாயத் துறையில், விவசாயத் தொழிலாளர்களிடையே தற்கொலை மரணங்கள் அதிகரித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “2021-ல் தற்கொலை செய்துகொண்டவர்களில் 25.6% தினசரி ஊதியம் பெறுபவர்கள்.
மத்திய அரசு ஏழைகள், கூலித் தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாகத் தொடங்கிய ஆத்மநிர்பார் திட்டம் என்பது பா.ஜ.க-வின் இந்தியாவில் இதுதானா?” எனக் கேளிவி எழுப்பி NCRB வெளியிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.