புதுடெல்லி: குஜராத் பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக மேதா பட்கர் களம் இறக்கப்படுவார் என்று மும்பை பாஜக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் நகுவா தெரிவித்தார். குஜராத்தில் வரும் நவம்பர் – டிசம்பர் மாதம் வாக்கில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து மும்பை பாஜக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் நகுவா கூறுகையில், ‘குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக சமூக ஆர்வலர் மேதா பட்கர் நிறுத்தப்படுவார்.
எனக்கு கிடைக்கும் தகவல்கள் சரியாக இருந்தால், குஜராத் சட்டசபை தேர்தலில் குஜராத்திற்கு எதிராக செயல்பட்ட மேதா பட்கரை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பார்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ெவளியிட்ட பதிவில், ‘மேதா பட்கர் ஒரு நகர்ப்புற நக்சல்; அவர் நர்மதா அணை திட்டத்தை எதிர்த்தவர். குஜராத் மற்றும் கட்ச் வளர்ச்சியை தடுத்தார். இதுபோன்றவர்களை குஜராத் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்’ என்றார்.