திதிகளில் சதுர்த்திக்கு ஒரு சிறப்பு உண்டு. வளர்பிறையோ தேய்பிறையோ அது விநாயகர் வழிபாட்டோடு தொடர்புடையது. ஒவ்வொரு வளர்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருந்து விநாயகரைக் காலையில் வழிபட வேண்டும். ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருந்து விநாயகப் பெருமானை மாலை வழிபட வேண்டும். இப்படி வழிபடுபவர்களுக்குக் கேட்கும் வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஓர் ஆண்டில் வரும் வளர்பிறைச்சதுர்த்தியில் தலையாயது ஆவணி மாதம் வரும் சதுர்த்தி. பிற சதுர்த்திகளில் வழிபடாதவர்கள்கூட ஆவணி வளர்பிறையில் வழிபட்டால் ஆண்டுமுழுவதும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும். எனவேதான் அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்றே அழைத்துக் கொண்டாடுகிறோம். காரணம் ஆவணி சதுர்த்தி அன்றுதான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்கிறது புராணம். தெய்வங்களில் முழுமுதற்கடவுள் விநாயகர். பண்டிகைகளிலும் தலையாயது விநாயகர் சதுர்த்தி.
மண் பிள்ளையார் ஏன்?
பிடித்துவைத்தால் பிள்ளையார் என்பது ஆன்றோர் வாக்கு. சந்தனமோ சாணமோ மஞ்சளோ தூய மனதுடன் எடுத்துப் பிடித்து வைத்து மஞ்சள் குங்குமம் சாத்தி வணங்கினால் அதில் பிள்ளையார் ஆவாகனமாகி அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கை. எந்த பூஜை தொடங்கும் முன்னரும் மஞ்சளில் விநாயகர் பிடித்து வழிபட்டு அதன் பிறகே பிரதான பூஜையைத் தொடர வேண்டும் என்பது ஐதிகம். எனவே விநாயக சதுர்த்தி பூஜையிலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபாட வேண்டியது மிகவும் அவசியம். மஞ்சள் விநாயகரை வழிபட்டபின் பிரதான பூஜையாக களிமண்ணால் ஆன விநாயகரை வழிபட வேண்டும். வீட்டில் விநாயகர் விக்ரகம் வைத்திருப்பவர்கள் கூட இந்த நாளில் புதிதாகக் களிமண் விநாயகர் வாங்கி வழிபடுவது விசேஷம்.
விநாயகரே எளிமையானவர். அரச மரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் எழுந்தருளி இருப்பவர். அவருக்கு மேற்கூரைகூடத் தேவையில்லை. அப்படிப்பட்ட விநாயகரை எளிய இயற்கைப் பொருள்கள் கொண்டு செய்வதுவே நல்லது. களிமன் மிக எளிதில் கிடைக்கும். பிற பொருள்களைக் கொண்டு செய்யப்படும் விநாயகரை பூஜைக்குப் பின் கரைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. ஆனால் களிமண்ணோ மிகவும் எளிதாகக் கரைந்து விடும். அப்படிப் பட்ட களிமண் விநாயகர் மிகவும் பவித்ரமானது என்கிறார்கள். எனவே ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்குப் புதிய களிமண் விநாயகரை வாங்கி வழிபடுவது விசேஷம். மேலும் காலையில் எழுந்து நீராடி வீட்டில் இருக்கும் குழந்தைகளோடு கிளம்பிச்சென்று விநாயகரை வாங்கிக்கொண்டு கொண்டாட்டமாகத் திரும்பி வரும் அனுபவமும் சிறப்பானது.
பூஜிப்பது எப்படி?
விநாயகர் சதுர்த்தி அன்று, காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து, நல்ல நேரத்தில் களிமண்ணினால் செய்த விநாயகர் சிலையை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும். பூஜை செய்ய உகந்த நேரத்தினை அறிந்துகொண்டு அந்த நேரத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் மஞ்சளில் ஒரு விநாயகரைப் பிடித்து அதற்குப் பின் வரும் மந்திரங்களைச் சொல்லி மலரும் அட்சதையும் சமர்பிக்க வேண்டும்.
ஓம் சுமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம: ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம: ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதுவே நம: ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம: ஓம் கஜானநாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம: ஓம் சூர்ப்பகர்ணாய…
என்னும் மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு பழம், வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்பூரம் காட்டி நம் வேண்டுதலைச் சொல்லிப் பின் விநாயகர் சதுர்த்தி பூஜை நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக்கொள்ள வேண்டும்.
பின்பு புதிதாக வாங்கிய விநாயகருக்கு சிறு வஸ்திரம், மலர், உபவீதம், சந்தனம், குங்குமம் ஆகியன சமர்ப்பித்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு விநாயகர் அஷ்டோத்திரம் அறிந்தவர்கள் மலர்கள், அருகம்பூ முதலியன கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அறியாதவர்கள், விநாயகர் அகவல் பாடி ஒவ்வொரு வரி முடிவிலும் மலர் சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு மோதகம் செய்து நிவேதனம் செய்வது விசேஷம். இயலாதவர்கள் வீட்டில் நாம் உண்ணும் உணவையே நிவேதித்து வழிபட்டால் போதுமானது. பின்பு கற்பூர ஆரத்தி காட்டி விநாயகர் பூஜையை நிறைவு செய்யலாம்.
கட்டாயம் மாலை வேலையில் சதுர்த்தி பிறையைத் தரிசித்து, விநாயகரை வணங்க வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் மாலை, தும்பைபூ மற்றும் எருக்கம்பூ சாற்றி வழிபடலாம்.
உகந்த நிவேதங்கள்
மோதகம், கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல்,பொறி, கடலை, சர்க்கரை, பேரீட்சை, தேங்காய்,விளாம்பழம், வாழைபழம், கொய்யா, மாதுளை, லட்டு மற்றும் சுண்டல் இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.
மகாபெரியவா அருளிய விநாயகர் ஸ்லோகம்.
எல்லோருக்கும் அருளும் முதல்வனை ‘விநாயகர் சதுர்த்தி’ அன்று வழிபடுவது சிறப்பாகும். முழுமுதற் கடவுள் நம்மை காத்து அருட்கொள்வான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ-
த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் விது: |
தத்-ஹேதோரிதி நீ திவித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம்
ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ (அ)வ்யாத் ஸ ந: ||
கருத்து: மகாபெரியவா இந்த ஸ்லோகத்துக்குக் கருத்தையும் அருளியிருக்கிறார்.
‘வேறே ஏதோ ஒரு தெய்வத்தை, அதாவது விநாயகர் அல்லாத மற்றொரு தெய்வத்தை, பூஜை பண்ண விரும்புகிறவர்கள்கூட தங்களுடைய பூஜையில் ஏற்படக்கூடிய விக்னம் நீங்குவதற்காக விநாயகரின் இரண்டு பாத கமலங்களை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். பூஜை செய்கிறவன் ‘தத்-ஹேது ந்யாயம்’ தெரிந்தவனாயிருந்தால் (வேறே தெய்வத்தைப் பூஜை பண்ணவேண்டுமென்றே நினைக்காமல்) ஏகப் பரம்பொருளான விநாயகர் ஒருவரையே பூஜிப்பதோடு முடித்துவிடுகிறான். இப்படி ஸகல கார்யத்தையும் தாமே பூர்த்தி செய்து தர வல்லவராக உள்ள அந்த விநாயகர். அவரே நம்மை ரக்ஷிக்கட்டும்’ என்கிறது இந்த ஸ்லோகம்.
வெற்றியை எளிதில் மகிழ்ந்து அருள்பவர் விநாயகர். அவருக்குரிய பூஜைகளில் தலையாயது விநாயகர் சதுர்த்தி. இந்த நாளில் விநாயகரை வழிபட்டு சகலகாரியங்களிலும் வெற்றி காண்போம்.
பூஜை செய்ய நல்ல நேரம்:
காலை 6.00 முதல் 7.00 மணி வரை
காலை 9.00 மணி முதல் 10 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 5 மணி வரை
மாலை 7.00 மணி முதல் 9 மணி வரை