திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடங்கின. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மூல விக்ரகம் அமைந்துள்ள பகுதி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதி மேற்கூரை முழுவதும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டதாகும். இந்த நிலையில் மழை பெய்யும்போது தங்க மேற்கூரையில் இருந்து நீர் கசிவது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்கூரையை உடனடியாக சீரமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீர்மானித்தது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கின.
பிரபல சிற்பிகளான பழனி ஆசாரி மற்றும் அனந்தன் ஆசாரி ஆகியோரின் தலைமையில் நேற்று ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். தங்கத் தகடுகள் வழியாக மொத்தம் 13 இடங்களில் நீர் கசிவது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத் தகடுகள் பசை மூலமும், ஆணிகள் மூலமும் இணைக்கப்பட்டு உள்ளன. நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தகடுகளை மீண்டும் பசை வைத்து ஒட்டவும், ஆணிகளை மாற்றவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. மழை இல்லாவிட்டால் 3 நாட்களில் பணிகளை முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.