அமெரிக்காவில் கடந்த சில காலமாக துப்பாக்கி கலாச்சாரத்தால் பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கான விதிகளை கடுமையாக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்காவின் 4 வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் ஹூஸ்டனில் கட்டிடம் ஒன்றுக்கு தீ வைத்த நபர் அதிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த ஆசாமியை சுட்டுக் கொன்றனர்.
அதே நாளில் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் காரில் சென்ற நபர் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 17 வயது சிறுவனும், 5 வயது பச்சிளம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
அதை தொடர்ந்து ஒரேகான் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை நோக்கி நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். பின்னர் அந்த கொலையாளி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரின் பல்வேறு பகுதிகளில் நபர் ஒருவர் கண்மூடித்தனமாக கண்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டபடி சென்றுள்ளார். இதனால் 3 பேர் பலியாகினர்.
ஒரே நாளில் அமெரிக்காவின் 4 பகுதிகளில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கான விதிகளை கடுமையாக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இச்சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.