புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6500 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் விவாதத்தின் பின் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பதில் அளித்து பேசியது: ”சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டில் படுகை அணையுடன் கூடிய தடுப்பணை பணி ரூ.20 கோடி செலவில் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்படும். நீர்வரத்து மற்றும் உபரிநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் ஏரிகளில் சேகரிக்கப்படும். மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ஐ ரூ.6,500-க உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் மாதங்களில் ரூ.1,000 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகை பெறும் மீனவர்கள் இறப்புக்கான இறுதிச் சடங்கு உதவித்தொகை ரூ.2,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். புதுச்சேரியில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் மீனவர் தகவல் சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும். ரூ.40 லட்சத்தில் சுனாமி நினைவகம் அமைக்கப்படும்.
மீனவர் நலத்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.850 கோடியில் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு நல்லவாடு பகுதியில் ரூ.17.92 கோடியிலும், பெரியகாலாப்பட்டில் ரூ.17.17 கோடியிலும், அரிக்கன்மேட்டில் ரூ.53 கோடியிலும் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும்.
அரியாங்குப்பம் ஆறு இணையும் பகுதியில் ரூ.87.58 கோடியிலும், வம்பாகீரப்பாளையத்தில் ரூ.19.82 கோடியிலும், காரைக்காலில் அரசாறு ஆற்றின் தெற்கு பகுதியில் ரூ.81.82 கோடியிலும் படகு தங்குதள வசதி ஏற்படுத்தப்படும். மூர்த்திகுப்பம் முதல் புதுக்குப்பம் வரையிலான கடலோர கிராமங்களில் கடலரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடலரிப்பைத் தடுக்க ஜியோ-ட்யூப்ஸ் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். கிருமாம்பாக்கம் ஏரியில் ரூ.210 கோடியில் ஒருங்கிணைந்த நீர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால் மீன்பிடித் துறைமுகங்களில் ரூ.66.40 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பனித்திட்டில் ரூ.19.50 கோடியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும். ரூ.7.50 கோடியில் ஒருங்கிணைந்த முன்மாதிரி மீனவ கிராமம் அமைக்கப்படும். புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம், பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் மறுசீரமைப்பு, காலாப்பட்டு, பாண்டி மெரீனா, வீராம்பட்டினம்,
காரைக்கால், மூர்த்திக்குப்பத்தில் கடற்கரை மேம்பாடு, மாஹே மற்றும் ஏனாமில் ஆற்றங்கரை மேம்பாடு, அரிக்கன்மேடு மேம்பாடு, ஆன்மீக சுற்றுலா மேம்பாடு செய்யப்படும். பிடிடிசி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாகூர் ஏரியில் ரூ.8 கோடியில் உபரிநீர் வாய்க்கால் பகுதியில் பாலம், ஏரியை சுற்றி சாலை அமைக்கப்படும். காரைக்காலில் ரூ.70 கோடியில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்படும். ரூ.33.44 கோடியில் நடேசன் நகர், அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை போடப்படும். பொதுப்பணித்துறையில் விடுப்பட்ட வவுச்சர் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பொதுப் பணித்துறை அமைச்சர் தெரிவித்தார்.