வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
மனசுக்கு பிடித்த விஷயங்களை திரும்ப திரும்ப பார்ப்பது, கேட்பது, உள்ளுக்குள் அசைபோடுவது அனைவரின் பழக்கம். பொன்னியின் செல்வன் போல வரலாற்று நாவல்களை பலமுறை படித்தவர்கள் இருப்பார்கள். இன்னமும் ஒரு முறை கூட படிக்காதவர்கள் இருப்பார்கள். அவர்களுக்காகவே மீண்டும் மீண்டும் புதிய வெளியீடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. கோயில்கள் விஷயங்களிலும் அப்படித்தான். ஆழ்வார்கள், நாயன்மார்களோடு தொடர்புடைய கோயில்களைப் பற்றி நிறைய பேர் எழுதி இருந்தாலும் யாராவது சிலர் அதை மீண்டும் எழுதுவார்கள். படிக்காமல் வெற்றிடமாக உள்ள மனங்களை குறிவைத்தே எழுத ஆரம்பிக்கிறார்கள், இக்கால நடையிலே. திருமாகாளம் அச்சம் தீர்த்த விநாயகர் பற்றி பல நாளிதழ்களில், ஆன்மிக இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன .
இருப்பினும் ஆன்மீக கட்டுரைக்கு எனக்கு பிள்ளையார் சுழி தேவைப்பட்டதால் நானும் அதில் இருந்து ஆரம்பிக்க நினைத்தேன்.
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரட்.சகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நாதாசுபசு நாசகம் நமாமிதம் விநாயகம் ”
-கணேச பஞ்சரத்ன தில் இப்படி விநாயகரை போற்றி பாடியிருப்பார் ஆதிசங்கரர்.
எதையும் எழுத ஆரம்பிக்கும் முன்பு அதற்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டு தான் ஆரம்பிக்கிறோம். “சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே ”
பூஜைகள் ஹோமங்கள் தொடங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி ஆரம்பிப்பார்கள். முழுமுதற் கடவுள் விநாயகர் தான் எல்லாவற்றிக்கும் ஆரம்பமாக இருப்பார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த போது இங்கு இருந்த சில டூரிங் திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் ‘கணபதியே வருவாய்..அருள்வாய்…பாடலை போட்டு தான் படத்தை ஆரம்பிப்பார்கள்.
விநாயகரை வரிசைப்படுத்தி பார்க்கும் போது முதல் விநாயகர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் என்றும் இரண்டாவதாக நன்னிலம் வட்டம் திருமாகாளம் அச்சம் தீர்த்த விநாயகர் என்றும் மாகாளநாதர் கோவில் குறிப்புகளில் உள்ளது.
“அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.”
மூன்றாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் அம்பர் மாநகர் பற்றி
பாடியுள்ளார். நாயன்மார்களில் ஒருவராகிய சோமாசிமாற நாயனார் இந்த அம்பர் கிராமத்தில் பிறந்தவர். சிவ பெருமான் திருவடிகள் போற்றி பல வேள்விகளை நடத்தி வந்தார். இவரைப் பற்றி சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையில் ‘அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்’ என்று பாடியுள்ளார்.
ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக தெரிகிறது. அவர் நடத்திய வேள்விகளில் மிக மிகச் சிறந்தது சோம வேள்வி தான்.
சிறப்பு வாய்ந்த அந்த சோம வேள்வி வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று திருமாகாளத்திலுள்ள இந்த விநாயகர் . கோயிலில்தான் நடந்தது. சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்டது இந்த கோவில் என்று ஆலய கல்வெட்டு சொல்கிறது. தான் நடத்தும் யாகத்தில் ஆரூர் தியாகராஜர் கலந்து கொண்டு அவிர்பாகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சோமாசிமாற நாயனார் விரும்பினார். தனது நண்பரான சுந்தரரிடம் அதை தெரிவிக்க அவரும் இறைவனிடம் அதைச் சொல்லிவிட்டார்.
பதிலுக்கு இறைவன் ‘நான் எப்ப வருவேன்…எப்படி வருவேன்னு சொல்ல மாட்டேன்… வரவேண்டிய நேரத்துக்கு சரியா வருவேன்னு 2002 ல் பேசப்பட்டதை அப்போதே அவர் சொல்லிவிட்டார்.
வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளன்று யாகம் நடத்த நாள் குறிக்கப்பட்டது. அன்று ஆயிரக்கணக்கில் அந்தணர்கள் அமர்ந்து யாகத்தை தொடங்கினார்கள். இறைவன் வரப்போகிறான் என்பதை அறிந்த மக்களும் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
யாகம் நடந்து கொண்டு இருந்த போது பறையொலியும் எக்காள சத்தமும் கேட்டது. இளைஞன் ஒருவன் இறந்த கன்றினை தோளில் சுமந்து கொண்டு இடுப்பில் பறை அணிந்து இடது கையில் நான்கு நாய்கள் பிணைந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு, வலது கையில் குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு பறையை அடித்துக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தான். அவருடன் கள் பானையை சுமந்து கொண்டு அவன் மனைவியும் இரு குழந்தைகளும் வந்து கொண்டு இருந்தார்கள். அதனைக் கண்ட மக்களும் அந்தணர்களும் அங்கிருந்து ஓடினார்கள்.
சோமாசி மாறர் யாகம் தடைபெறாமல் நடக்க விநாயகரை தொழுது வணங்கினார். அவரது அச்சத்தை போக்கி வந்தது இறைவன்தான் என்று அனைவருக்கும் உணர்த்தினார் விநாயகர்.. அன்று முதல் அவர் அச்சம் தீர்த்த விநாயகர் ஆனார். இறைவன் அவிர்பாகத்தை பெற்றுக்கொண்டு காட்சியளித்து அனைவருக்கும் அருள் புரிந்தார். இந்த சோமயாகப் பெருவிழா இன்றும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தனது பக்தன் நடத்தும் யாகத்தில் கலந்து கொண்டு சிறப்பித்து அவரை ஆட்கொள்ளவும் விநாயகரை வழிபட்டால் மக்களின் அச்சம் தீரும் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே இறைவன் இப்படி ஒரு திருவிளையாடல் நடத்தினான்.
கடந்த ஏப்ரல் 6 ந் தேதி இக்கோயிலின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாதாமாதம் சங்கடஹர சதுர்த்தி ஹோமத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நமது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கும் போது மனது பலவீனமாகிவிடும். அச்சம் நம்மை சூழ்ந்து நிற்கும். அதை விரட்டியடிக்க ‘அச்சம் தீர்க்கும் விநாயகர்’ அவரை வணங்குவோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா! -அவ்வையார் பாடலோடு நிறைவு செய்கிறேன்.
(குறிப்பு : இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. திருவாரூர் மயிலாடுதுறை வழித்தடத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.