ராய்ப்பூர்: சதீதஸ்கர் மாநிலத்தில் விவாகரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சத்தீஸ்கர் ஐகோர்ட் முக்கிய உத்தரவு கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.
தம்தாரி மாவட்டத்தில் வசிக்கும் 32 வயது நபர் ஒருவர், ராய்பூரை சேர்ந்த 34 வயதான விதவை பெண்ணை கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும், இருவருக்கும் இடையே தொடர்ச்சியாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த நபர் பல்வேறு காரணங்களைக் கூறி விவாகரத்து கோரி ராய்பூர் குடும்ப நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
வழக்கு
அந்த பெண் தனது துஷ்பிரயோகம் செய்வதாகவும் தனது பெற்றோர் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களைக் கூட சந்திக்க விடுவதில்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு உறுதியான நிலையில், கடந்த டிசம்பர் 2019இல் இருவருக்கும் விவாகரத்தை அளித்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
பொய்யான ஆதாரம்
உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்த பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷிஷிர் ஸ்ரீவஸ்தவா, மனைவியைக் கணவர் கொடூரமாக நடத்தப்பட்டதை குடும்ப நல நீதிமன்றம் கவனிக்கத் தவறவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், கணவன் பொய்யான ஆதாரங்களை உருவாக்கி விவாகரத்து பெற முயன்றதைக் காட்டும் மனைவியின் வாக்குமூலங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனால் குடும்பநல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அலுவலகம்
கணவர் சார்பில் ஆஜரான வக்கீல் சி ஜெயந்த் கே ராவ், 2017இல் நடந்த பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிட்டார். அந்த நபரை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த பெண் செயல்பட்டதாகவும், அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்ததாகவும் தெரிவித்தார். இதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் மனைவி கணவரின் அலுவலகத்திற்குச் சென்று அவரை அசிங்கப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
முதல்வருக்குக் கடிதம்
மேலும், அந்த நபரை டிரான்ஸபர் செய்யக் கோரி முதலமைச்சருக்குக் கடிதங்களையும் அந்த பெண் அனுப்பி வைத்தாக வக்கீல் சி ஜெயந்த் கே ராவ் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், “ஆதாரங்களை ஆய்வு செய்ததில், அந்த பெண் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கணவரைத் திட்டியது தெளிவாகத் தெரிகிறது. இது குறித்து அந்த கணவரும் கூட பல முறை புகார் அளித்துள்ளார். போலீசார் அதைக் கண்டுகொள்ளவில்லை.
புகார்
உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கணவர் புகார் அளித்துள்ளார். அந்த கணவன் தகாத உறவில் ஈடுபட்டதாக அந்த பெண் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கணவர் மற்றும் அந்த பெண்ணின் தங்கை கொடுத்த வாக்குமூலங்களும் இதையே காட்டுகிறது. இதுமட்டுமின்றி கணவரை அலுவலகத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யுமாறு மனைவி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், கணவரின் அலுவலகத்திற்குச் சென்று தகாத வார்த்தைகளாலும் அந்த பெண் திட்டியுள்ளது உறுதியாகி உள்ளது.
உத்தரவு
அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவி கணவனின் அலுவலக வளாகத்திற்குச் சென்று, அவரைத் தகாத முறையில் பேசி திட்டியுள்ளார். இது கணவனின் இமேஜ்ஜை பாதிப்பதாக உள்ளது. மேலும், அந்த நபரின் கணவரைப் பார்க்கக் கூட பெண் அனுமதிக்கவில்லை. இதுவும் கொடுமைக்குச் சமம் தான். எனவே, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்” என்றார்.