இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உலகின் 3ஆவது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார். ஆனால் இந்தியாவில் மிக அதிக கடன் வாங்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் அவரது நிறுவனம்தான் முன்னணியில் இருக்கிறது.
அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 3ஆவது பெரிய பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளதாக BLOOMBERG BILLONAIRES INDEX தெரிவித்துள்ளது. 60 வயதான கௌதம் அதானி, ஏற்கனவே உலகின் 3ஆவது பணக்காரராக இருந்த லூயிஸ் வியூட்டன் நிறுவனத்தின் பெர்னாட் ஆர்னால்டை பின்னுக்கு தள்ளி அந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதானி குழுமத்தில் 7 நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக, எரிவாயு, சுரங்கம், துறைமுகங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு என பல துறைகளில் அதானி குழுமம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரராக டெஸ்லா மற்றும் ஸ்பேக் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கும், இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸும் உள்ளனர். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 11ஆவது பெரும்பணக்காரராக உள்ளதாக புளூம்பெர்க் பெரும்பணக்காரர் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபார வளர்ச்சியில் அதானியின் நிறுவனங்கள்:
ஜூன் 30, 2022 இல் முடிவடைந்த சமீபத்திய காலாண்டில், அதானி குழும நிறுவனங்களின் ஒருங்கிணைந்த லாபம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) கிட்டத்தட்ட 155 சதவீதம் உயர்ந்து ரூ.6,897.85 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் லாபம் ரூ.2,705.84 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், அதானி குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனையும் 102 சதவீதம் அதிகரித்து ரூ.79,769.97 கோடியாக உள்ளது.
இந்த நிதியாண்டின் துவக்கத்தில் இருந்தே அதானி குழும நிறுவனங்கள் அதன் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. சில சதவீத லாபத்தைப் பார்ப்பதற்கு கடுமையாக போராடும் நிலையில், அசால்ட்டாக ஆயிரக்கணக்கான சதவீதங்களில் லாபத்தை வாரிக் குவித்துள்ளன அதானியின் நிறுவனங்கள். வளர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் அதில் முதலிடத்தில் இருப்பது அதானி டோட்டல் கேஸ் நிறுவனம். ஓராண்டில் அந்நிறுவனத்தின் லாப சதவீதம் எவ்வளவு தெரியுமா? ஒன்றல்ல., இரண்டல்ல.. கிட்டத்தட்ட 4 ஆயிரம் சதவீதம் ஆகும்.
மார்ச் 31, 2020 அன்று ரூ.86.40 ஆக இருந்த இந்நிறுவன பங்கு நேற்று (ஆகஸ்ட் 29, 2022) ரூ.3537.80 ஆக உயர்ந்துள்ளது. சரியாகச் சொல்வதென்றால் 3,994 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அதானி எண்டர்பிரைசஸ் 2,184 சதவீதம் வளர்ச்சியையும், அதானி டிரான்ஸ்மிஷன் 1,942 சதவீதம் வளர்ச்சியையும், அதானி கிரீன் எனர்ஜி 1420 சதவீதம் வளர்ச்சியையும், அதானி பவர் 1315 சதவீதம் வளர்ச்சியையும் மற்றும் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் 231 சதவீதம் வளர்ச்சியையும் பெற்றுள்ளன.
அத்தனையும் கடன்! அபாய ஒலி எழுப்பும் நிபுணர்கள்!
அதானி நிறுவனத்தின் அபார வளர்ச்சி பற்றி கருத்து தெரிவித்துள்ள CreditSights, “அக்குழுமத்தின் பெருகி வரும் விரிவாக்க ஆர்வத்தை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். அது பெரும்பாலும் கடன் நிதியில் இருக்கிறது.” என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. ஆம்.! சந்தை நிலவரங்களில் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான தரவுகளின் படி அதானி குழும நிறுவனங்களிம் ஒட்டுமொத்த கடன் மதிப்பு ரூ.2.2 லட்சம் கோடி ஆகும்.
இவ்வளவு கடனில் இருக்கிறாரா அதானி? எப்படி?
2016 ஆம் ஆண்டிலேயே அதானி குழுமத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக்கடன் இருந்தது. பின் அடுத்தடுத்த நிறுவனங்களை துவக்கும்போதும், பிற நிறுவனங்களை வாங்கி அதனை தனது குழுமத்துடன் இணைக்கும்போதும் அதனை “கடன்” வழியாகவே அதானி குழுமம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ் நவி மும்பை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக எஸ்.பி.ஐ வங்கியிலிருந்து ரூ.12,770 கோடியை கடனாக பெற்றுள்ளது. மேலும் குஜராத்தில் அதன் கிரீன்ஃபீல்ட் செப்பு சுத்திகரிப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தை நிர்மாணிக்க 6,000 கோடி ரூபாய் கடனாகப் பெற்றது.
இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான SB எனர்ஜி லிமிடெட், அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான அதானி கிரீன் எனர்ஜியால் $3.5 பில்லியன் பணத்திற்கு (இந்திய மதிப்பில் ரூ.27 ஆயிரம் கோடி) வாங்கப்பட்டது. இப்படி கடனிலேயெ முதலீடுகளை பெரும்பாலும் மேற்கொண்டதன் விளைவாக 2022 ஆம் ஆண்டு அதன் கடன் 2.2 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. வருடத்திற்கு 12 சதவீதம் அளவிற்கு கடனிலும் அபார வளர்ச்சி கண்டுள்ளது அதானி குழுமம்.
அம்பானியும் கடனில் இருக்கிறார்! ஆனால் சிக்கல் அதானிக்குத்தான்! ஏன்?
இந்தியாவின் மற்றொரு கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் கடன் அதானியை விட அதிகமாகும். மார்ச் 2022 நிலவரத்தின் படி, முகேஷ் அம்பானியின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதானியை விட 80 ஆயிரம் கோடி அதிகமாக அம்பானி கடன் வாங்கியிருக்கும் போதிலும் அதானிதான் கடன் ஆபத்தில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அம்பானியின் நிறுவனத்திற்கு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.1.1 லட்சம் கோடி ஆகும். இதன் விளைவாக மொத்தக் கடனுக்கும் செயல்பாட்டு வருமானத்திற்கும் இடையிலான விகிதம் 2.7 ஆக உள்ளது. அதே வேளையில் அதானி நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.33 ஆயிரம் கோடி ஆகும். இதன் விளைவாக மொத்தக் கடனுக்கும் செயல்பாட்டு வருமானத்திற்கும் இடையிலான விகிதம் 6.6 ஆக உள்ளது. அதானி குழுமம் எதிர்கால விரிவாக்கத்திற்காக முதலீடு செய்கிறது என்ற உண்மையைக் கணக்கில் கொண்டாலும், செயல்பாட்டு வருமான விகிதத்திற்கான மொத்தக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதை பொருளாதார வல்லுநர்கள் ஆபத்தாகவே பார்க்கின்றனர்.
அரசின் கரிசனம் அதானிக்கு உதவுமா?
அதிகரிக்கும் கடனால் அதானி குழுமம் நெருக்கடிக்குள் சிக்குமா என்றால் அதற்கு வாய்ப்பு குறைவே! 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-17 கால கட்டத்தில் 72 ஆயிரம் கோடி மதிப்பிலான அதானி குழுமத்தின் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியிருப்பதும் அதை சமீபத்திய இலவசங்கள் குறித்த உச்சநீதிமன்ற வழக்கில் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இன்னும் நிறுவனத்தையே துவக்காத அதானிக்கு எப்படி அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
அதானி வீழ்ந்தால் மக்களுக்கும் பிரச்சினையே!
ஒன்றுக்கொன்று சாராத தொழில்களில் தான் அதானி குழுமம் முதலீடு செய்து இயங்கி வருகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் ஒரே சமயத்தில் நெருக்கடிக்குள் சிக்குவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு எனும் போதிலும், ஒன்றிரண்டு நிறுவனங்கள் நஷ்டத்தை அல்லது சுணக்கத்தை சந்திக்கும்போது ஒட்டுமொத்த முதலீடும் கடனை அடிப்படையாக கொண்டதால் அது நிறுவனத்திற்கு அழுத்தத்தை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடன் வழங்கிய வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதங்கள் ஆகியவையும் நிறுவனத்தை ஒருசேர நெருக்கடிக்கு உள்ளாக்கினால், இந்திய பங்குச் சந்தைக்கே இழப்பை அது ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், கடன் வழங்கிய வங்கிகள் எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனம் என்பதால் அவை வங்கிகளுக்கும் சுமையாக மாறி, அதன் வாடிக்கையாளர்களாக இருக்கும் சாமானியர்கள் தலையில் தான் அந்த பாரமும் விழும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM