மதுரை: நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு மற்றும் பேஸ் டிடெக்டரை பயன்படுத்தலாம் என ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரைத்துள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் – உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீட் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் தேனி சிபிசிஐடி போலீசார், மாணவர்கள், பெற்றோர் பலரை கைது செய்தனர். இந்த மோசடியில் என்னையும் கைது செய்துள்ளனர். எனக்கு இந்த மோசடியில் எந்த தொடர்பும் இல்லை. தவறாக எனது பெயரை வழக்கில் ேசர்த்துள்ளனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தாலும், இவர்கள்தான் ஈடுபட்டனர் என்பது போதுமானதாக இல்லை. கைதானவர்களின் தகவலின்பேரிலேயே பலரை கைது செய்துள்ளனர். ஜாமீன் கோரிய எனது மனு பிப். 16ல் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.
இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் வக்கீல் மீனாட்சிசுந்தரம் ஆஜராகி, ‘‘2019ல் நடந்த நீட் ேமாசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் சரணடைந்துள்ளனர். 2 பேர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். நீட் மோசடி தொடர்பாக டெல்லி, ஹரியானாவிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது. விண்ணப்பம் பதிவு செய்யும்போது புகைப்படம், கைரேகை மட்டுமின்றி கருவிழியும் பதிவு செய்திட வேண்டும். மனுதாரர் பெயர், அவரது பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து, ெகஜட் அதிகாரியின் மூலம் சான்றொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில், ஏதேனும் மாற்றம் இருந்தால் அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கலாம். தேர்வு கட்டணம் விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து மட்டுமே பெற வேண்டும். மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழில் அவர்களின் எமிஸ் எண்ணை பதிவிட வேண்டும். இந்த எண்ணுடன் கூடிய சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆதார் மற்றும் எமிஸ் எண்கள் பதிவின் மூலம் இரட்டை பதிவு ேபான்றவற்றை தவிர்க்க முடியும். கருவிழி உள்ளிட்ட விபரங்களை தேர்வு சீட்டுடன் ஒப்பீடு செய்ய வேண்டும். கைரேகையை தெளிவாக பதிவு செய்திடும் வகையில், நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு பதிவு ெசய்ய வேண்டும். மதிப்பெண் பட்டியல் கியூ ஆர் கோட் மூலம் சரிபார்க்க வேண்டும்’’ என்றார். சிபிஐ வக்கீல் முத்துசரவணன் ஆஜராகி, ‘‘நீட் தேர்வு மையத்தில் ஒவ்வொருவரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்வு அனுமதி சீட்டில் உள்ள புகைப்படத்தை ஒப்பீடு செய்ய வேண்டும். விண்ணப்பம், தேர்வு மையம் மற்றும் கவுன்சலிங் ஆகிய இடங்களில் கைரேகை பதிவு செய்யப்பட வேண்டும். பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும். தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி நீதிபதி ஒத்திவைத்தார்.