பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த தமிழக போலீசாருக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை தலைமை இயக்குநர் ஜி. வெங்கடராமன் வெளியிட்டதாக வெளியான அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “எரிபொருள் விலை உயர்வினையும் தற்போதைய எரிபொருள் நெருக்கடிகளையும் கருத்திற் கொண்டு எரிபொருள் சிக்கனத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் அரசு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட அதிக எரிபொருள் பயன்படுத்தினால் அவ்வாறு பயன்படுத்திய அதிக எரிபொருளுக்கு பின்னேற்பாணை வழங்கப்பட மாட்டாது எனவும், அதிகமாக பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கு சம்பந்தப்பட்ட வாகனம் பயன்படுத்தப்படும் அலுவலரிடமிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் எனவும். மேற்கண்ட அரசாணையில் தெரிவித்துள்ளதால் காவல் துறை வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பிற்கு மிகாமல் திட்டமிட்டு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்படி அனைத்து சார்நிலை. அலுவலர்களுக்கும் வருடாந்திரமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், காவல் துறையில் இயங்கும் அனைத்து வாகனங்களும், அவை இயங்கும் எல்லையின் அடிப்படையில், மேற்கண்ட வாகனங்கள் மாத எரிபொருள் உச்ச வரம்பினை பயன்படுத்தும்படி அனைத்து பிரிவு காவல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமை அலுவலகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பை விட எக்காரணத்தை முன்னிட்டும் கூடுதலாக எரிபொருள் பயன்படுத்தக்கூடாது கூடுதல் எரிபொருள் பிடித்தம் செய்தால் அத்தொகையினை வாகனம் உபயோகித்த அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படவேண்டும் என பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்குறிப்பாணைகளில் கண்டுள்ள அறிவுரைகளை மிகவும் கடுமையாக பின்பற்றுமாறும், மேலும் பின்னேற்பாணை வழங்கப்படாது எனவும் அனைத்து சார்நிலை அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.