இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டத்தை எதிர்ககும் மக்கள் – கள நிலவரம்

மன்னார் போராட்டம்

BBC

மன்னார் போராட்டம்

இலங்கையின் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலுக் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது.

மன்னார் மாவட்ட மக்கள், மீனவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மன்னார் நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், தனியார் பேருந்து போக்குவரத்து நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டிந்தன.

கனிய மணல் அகழ்வு காரணமாக மன்னார் தீவு பகுதியில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், காற்றாலை மின் உற்பத்தி திட்டம் காரணமாக எதிர்காலத்தில் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த இரண்டு திட்டங்களையும் உடனடியாக மன்னார் தீவு பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்து, எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணொருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இலங்கை அதானி திட்டம்

BBC

இலங்கை அதானி திட்டம்

”இந்த இடத்தில் இவ்வளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். எதற்காக? தீவை நாசப்படுத்துவதற்கு அபிவிருத்திகளை காட்டி, எங்களை ஏமாற்றி மண் வளம் நாசமாகிக் கொண்டு போகின்றது. காலப் போக்கில் இந்த தீவு அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருப்போமோ தெரியாது. எங்களுடைய தீவு விற்கப்படுகின்றது. எங்களுடைய தீவை இழப்பதற்கு நாங்கள் விட்டு விட மாட்டோம். மண் அகழ்விலிருந்தும், காற்றாலை திட்டத்திலிருந்தும் விடுபடத் தக்கதாக எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தீர்வை காணாமல் இந்த இடத்தை விட்டு நாங்கள் போக மாட்டோம்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கருத்து தெரிவித்தார்.

”எங்களுடை மன்னார் மாவட்டத்தில் காற்றாலை அமைக்கின்றமையினால், ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து நாங்கள் பல இடங்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றோம். ஆனால் மீண்டும் அது பற்றிய பேச்சுக்கள் நடந்துக்கொண்டிருக்கின்றது. எங்களுடைய கரைவலைப்பாடு இடங்களில் இந்த காற்றாலை மின்சாரம் அமைக்கின்றமையினால், எங்களுடைய 7 தொடக்கம் 10 கிலோமீற்றர் இடம் பறிப் போகின்றது. எங்களுடைய தொழிலுக்கும் இடைஞ்சலாக இருக்கின்றது. எங்களுடைய தொழிலை முடக்குகின்ற செயற்பாடாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்” என ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பொதுமக்கள் கையெழுத்து பெறும் நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்தனர்.



அரசாங்க அதிபரிடம் கோரிக்கை மனு

இலங்கை போராட்டம்

BBC

இலங்கை போராட்டம்

கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலுக் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்துடனான மகஜரொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான அதிகாரம் தனக்கு இல்லாமையினால், இது தொடர்பில் தான் மேலிடத்திற்கு அறிவிப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மக்களினால் கையளிக்கப்பட்ட இந்த மகஜரை, தான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை போராட்டம்

BBC

இலங்கை போராட்டம்

வடக்கின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை, இந்தியாவிற்கு சொந்தமான அதானி நிறுவனத்திற்கு வழங்க இலங்கை அரசாங்கம் கடந்த 16ஆம் தேதி தீர்மானித்திருந்தது.

இலங்கையின் வடப் பகுதியிலுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு அதானி நிறுவனத்திற்கு அனுமதியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதானிக்கு வாய்ப்பு கொடுத்த அரசாங்கம்

அதானி போராட்டம்

Getty Images

அதானி போராட்டம்

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இந்த அனுமதி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடந்த 16ம் தேதி டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.

மன்னார் பிரதேசத்தில் 286 மெகா வோர்ட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 234 மெகா வோர்ட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்காக அதானி நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

இவ்வாறான நிலையில், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், கனிய வள மண் அகழ்விற்கும் மன்னார் மாவட்டத்தில் எதிர்ப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

https://www.youtube.com/watch?v=zA2Va1Upd8c

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.