தற்போதைய நெருக்கடியைத் தீர்த்து, பொருளாதாரப் போக்கை மாற்றியமைக்கும் வரவு செலவுத் திட்டம்  சமர்க்கப்பட்டது

தேசிய பொருளாதார உபாயமொன்றை உருவாக்கும் படிக்கல்லாக 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதுவரை காணப்பட்ட பொருளாதார போக்கை மாற்றியமைக்கும் அடித்தளமாக இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் அமையும் என்று ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை  மற்றும் தேசிய கொள்கை விவகார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) பிற்பகல் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாத வரை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடியை வெற்றிகொள்வது அனைவரதும் பொறுப்பு என்ற வகையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும், சர்வக் கட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

தனிப்பட்ட  அரசியல்  இலக்குகளை புறந்தள்ளிவிட்டு நாட்டினையும் தேசத்தையும் மீளக் கட்டியெழுப்பும் பணியில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.


இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நாம் உலகத்தின் விழிம்பு நிலைக்குத்  தள்ளப்படுவோம் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் முக்கியமான விடயங்கள்

  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் 20,000 ரூபாவிற்கு மேலதிகமாக மேலும் 2,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கப்படும்.
  • போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்க நடவடிக்கை.
  • மண்ணெண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிறு மீன்பிடி படகு மீனவர்கள் மற்றும் மின்சார வசதியற்ற பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம்.
  • பொருளாதார நெருக்கடியினைக் குறைக்க சமூக ஸ்திரத்தன்மையை மீள நிர்மாணிக்க 133 பில்லியன் ஒதுக்கீடு.
  • சமுர்த்தி உதவி பெறும் 7 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு 7500 ரூபாவாக அதிகரிப்பு.
  • சமுர்த்தி கொடுப்பனவுகளுக்காக காத்திருக்கும் 726,000 குடும்பங்களுக்கு தற்காலிகக் கொடுப்பனவாக 5,000 ரூபா உதவித் தொகை.
  • முதியோர் அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவு 7,500 ரூபாவாக அதிகரிப்பு.
  • உதவிக்காக காத்திருக்கும் முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு தற்காலிக கொடுப்பனவாக 5,000 ரூபா வழங்க நடவடிக்கை.
  • அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு 5 வருட காலத்திற்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும்.
  • அரசாங்க மற்றும் அரச சார்பு ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயது இவ்வருடம் டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் 60 ஆக குறைப்பு.
  • அரசு துறையின் பயன்பாட்டுக்காக எதிர்காலத்தில் மின்வலு கொண்ட வாகனங்கள் மாத்திரமே கொள்வனவு செய்யப்படும்.
  • பற்றாக்குறை ஏற்படாதவாறு எதிர்காலத்திலும் தேவையான சமயல் எரிவாயுவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.
  • 2 ஹெக்ரேயர் அல்லது அதற்குக் குறைந்தளவு நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு, விவசாயக் கடனை (05.2022 வரை) மீளச் செலுத்த முடியாத சுமார் 28,259 விவசாயிகளுக்கு கடன் சலுகை.
  • பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் உயர் கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக தனியார் முதலீட்டை ஊக்கவிக்க ஆலோசனை.
  • மரக்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் தேயிலை உற்பத்திகளை கொழும்பிற்குக் கொண்டுவர சரக்கு ரயில் சேவையை மேம்படுத்த நடவடிக்கை. ஆரம்ப கட்டமாக, ஹாலி எல – கொழும்பு கோட்டை சேவை ஆரம்பிக்கத் திட்டம்.
  • புகையிரதத்துறையின் தரம் மற்றும் வினைத்திறன் மேம்பாட்டுக்காக தனியார் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை.
  • எரிபொருள் பாவனையைக் குறைப்பதற்காக மின்சார துவிச்சக்கர வண்டிகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கு ஊக்குவிப்பு.
  • 2022 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும் வகையில், பெறுமதி சேர்க்கப்பட்ட வரி 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை அதிகரிப்பு.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-30

              

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.