விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் இந்து அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறதா?

1980களில் தொடங்கி தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் வெகுவாக அதிகரித்திருக்கின்றன. ஆனால், இந்த ஊர்வலங்களால் இந்து அமைப்புகளும் கட்சிகளும் வளர்ச்சியடைந்திருக்கின்றனவா?

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் பொது இடங்களில் 5,200 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும் அதற்குப் பிறகு ஊர்வலமாகச் சென்று இந்த சிலைகளைக் கரைக்கவும் இந்து அமைப்புகள் முடிவுசெய்துள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஊர்வலங்கள் வார இறுதியான செப்டம்பர் 3 மற்றும் நான்காம் தேதிகளில் நடத்தப்படவிருக்கும் நிலையில், இதற்கென கடுமையான கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது சென்னை நகரக் காவல்துறை.

உண்மையில் இந்த விநாயகர் ஊர்வலங்கள் என்ன நோக்கத்திற்காக நடத்தப்படுகின்றன, இந்து அமைப்புகள் தங்கள் வளர்ச்சிக்காக இந்த ஊர்வலங்களை நடத்தினாலும், அவை எதிர்பார்த்த அளவுக்கு வளர்ந்திருக்கின்றனவா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.



பிள்ளையார் ஊர்வலங்களின் தொடக்கம் எப்போது?

ஆரம்பத்திலிருந்தே வீடுகளுக்குள்ளேயே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டுவந்த நிலையில், கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அவை பொதுவெளியில் கொண்டாடப்படும் பண்டிகையாக மாற்றப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அப்போதைய பிரிட்டிஷ் அரசு, பால்ய விவாகத்தைத் தடைசெய்யும் வகையிலான சட்டத்தைக் கொண்டுவந்தது. அதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த பால கங்காதர திலகர், இந்துக்களை ஒன்றுதிரட்ட விநாயகர் சதுர்த்தி விழாவைப் பயன்படுத்த நினைத்தார்.

விநாயகர் சதுர்த்தியை வீட்டில் மட்டும் கொண்டாடாமல், பொது இடங்களிலும் சிலைகளை நிறுவி கொண்டாடச் சொன்னார் திலகர். மேலும், அவற்றைத் தனித்தனியாகச் சென்று ஆற்றில் கரைக்காமல், ஊர்வலமாகச் சென்று ஆற்றில் கரைக்கும்படியும் வலியுறுத்தினார். அந்தத் தருணத்திலேயே, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மோதல்கள் வெடித்தன. இருந்தபோதும், இந்த ஊர்வலத்திற்கான ஆதரவு மகாராஷ்டிராவில் பெருகியது. வேறு சில மாநிலங்களிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் போக்கு உருவானது.

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1980களின் துவக்கம்வரை பொது இடங்களில் மிகப் பெரிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதோ, அவற்றை ஊர்வலமாகச் சென்று கரைப்பதோ வழக்கமாக இருந்ததில்லை. 1982ல் மீனாட்சி புரம் மதமாற்ற நிகழ்வைத் தொடர்ந்து உருவான இந்து முன்னணி அமைப்பு, இந்துக்களிடம் எளிதில் சென்றடைய பால கங்காதர திலகரின் வழியைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்தது.

Have Vinayagar Chaturthi processions helped the growth of Hindu organizations in Tamil Nadu?

“1983ல் மேற்கு மாம்பலத்தில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஒரு கோவிலுக்கு அருகில் விநாயகர் சிலை ஒன்றை வைத்து வழிபாடு நடத்தினார்கள். சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகில் இருந்த குளத்தில் கரைத்தனர். இதற்கு அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது, திருவல்லிக்கேணி உட்பட நகரின் பல பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதற்குப் பிறகு மிக விரைவாக சென்னையில் இந்தக் கலாச்சாரம் பரவியது.” என தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸைச் சேர்ந்த பேராசிரியர் சி.ஜே. ஃபுல்லர்.

1980களின் மத்தியில் சென்னையில் மட்டுமே பரவலாகக் கொண்டாடப்பட்டுவந்த விநாயகர் சதுர்த்தி 80களின் இறுதியில் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவத் துவங்கியது. கிராமம், நகரம், குக்கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பகுதிகளிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கும் போக்கு அதிகரித்தது.

இந்த துவக்க ஆண்டுகளில் இதுபோல பிள்ளையார் சிலைகளை வைப்பதில் பெரும்பாலும் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டனர். 1990களின் இறுதியில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு மாறத் துவங்கியது. இதற்கென விழா கமிட்டிகள் அமைக்கப்பட்டன. அதில் உள்ளூர் வியாபாரிகள், பிரமுகர்கள் இடம்பெற்றனர். விநாயகர் சதுர்த்திக்கென பண வசூலும் இந்த காலகட்டத்தில் தீவிரமடைந்தது. பல இடங்களில் சிலைகளை வைக்க விரும்புவோருக்கு, இலவசமாகவே இந்து முன்னணி பிரம்மாண்ட விநாயகர் உருவங்களைக் கொடுத்ததாக சி.ஜே. ஃபுல்லர் பதிவுசெய்கிறார்.

இந்த காலகட்டத்தில், இந்து முன்னணியின் வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரித்துவந்தது. வட இந்தியாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் எப்படி ஒரு இந்து கலாச்சார அமைப்பாக இயங்கிவருகிறதோ, அதே பாணியில் தன்னை வடிவமைத்துக்கொண்ட இந்து முன்னணி, தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கிளைகளைப் பரப்பியது. 1995-96 இல் இந்து முன்னணியிலிருந்து சிலர் பிரிந்து இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் செயல்படத் துவங்கினர். இது விநாயகர் சதுர்த்தியிலும் எதிரொலித்தது என்றாலும், விநாயகர் சதுர்த்தி விழாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும்போது ஒரு அடிக்கும் குறைவான உயரத்திலான விநாயகர் சிலைகளே வைத்து வணங்கப்படும் நிலையில், பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் உயரம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தது. 1990களின் மத்தியில் சில விநாயகர் சிலைகள் 30 அடி உயரம்வரை செய்யப்பட்டு சென்னையில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் இதற்குக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர நினைத்த தமிழ்நாடு அரசு, சிலைகளின் உயரம் 18 அடியைத் தாண்டக்கூடாது என உத்தரவிட்டது. இந்த கட்டுப்பாடு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லையென்றாலும், ஊர்வலங்கள் செல்லும் பாதையில் இருந்த பாலங்களில் இடிக்காத அளவுக்கு உயரம் என்பதே, உண்மையான கட்டுப்பாடாக இருந்தது.

சென்னையைப் பொருத்தவரை, திருவல்லிக்கேணியில் உள்ள திருவட்டீஸ்வரன் கோவில் முன்பாகத்தான் வைக்கப்படும் பிள்ளையார் சிலைதான், இந்த நிகழ்வின் மையமாக இருக்கும். சென்னை தியாகராய நகர், மாம்பலம் பகுதிகளிலும் மிகப் பெரிய அளவிலான சிலைகள் வைக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

“நிறைய பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதன் மூலம் அவற்றை விநாயகரின் இடமாகவும், அதைத் தொடர்ந்து அதனை இந்துக்களின் இடமாகவும் மாற்றினார். சிறு கிராமங்களில் 3-4 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இந்துக்களின் இருப்பு எல்லா இடங்களிலும் இருப்பதாகக் காட்டப்பட்ட நிலையில், நகரங்களில் மிகப் பிரம்மாண்டமாக 25 அடி உயரத்திற்கு சிலைகள் வைக்கப்பட்டன. இப்படி பிரம்மாண்டமான விநாயகர் உருவம் வைக்கப்படுவது அந்த வழியாகச் செல்லும் சாதாரண மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரம், இந்துக்களின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் சிறுபான்மையினரைத் தூண்டும் வகையில் இந்தச் சிலைகள் அமைந்தன. இந்தப் பகுதிகளில் மிகப் பெரிய அளவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் உறுதிசெய்தன” என்கிறார் சி.ஜே. ஃபுல்லர்.



வீடுகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளைப் பொறுத்தவரை, அவை மூன்று நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்பட வேண்டும் என்பதே வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், சென்னையைப் பொறுத்தவரை விநாயகர் சிலை கரைக்கப்படும் நிகழ்வு, விநாயகர் சதுர்த்திக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பெருமளவிலான மக்கள் அந்த ஊர்வலத்தில் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டது.

1999ல் ஆறு நாட்கள் கழித்தும் 2000ல் 9 நாட்கள் கழித்தும் இந்த ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இத்தனைக்கும் 2000வது ஆண்டில், விநாயகர் சதுர்த்தி முடிந்த 2வது நாளில் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலும், அதற்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமையே ஊர்வலத்திற்காக தேர்வுசெய்யப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஒன்பது நாட்களும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகள் மக்களிடம் தீவிரமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

1980களில் இருந்தே இந்த ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகளின் அளவு தொடர்ந்து அதிகரித்துவந்தது. சென்னையில் துவக்கத்தில் 3-4 அடி உயரமுள்ள சுமார் ஐயாயிரம் சிலைகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றன. 90களின் துவக்கத்தில் இது 6,500ஆக உயர்ந்தது. கடந்த நூற்றாண்டின் இறுதியில் 18 இடங்களில் சிலைகளைச் சேகரிக்கும் அளவுக்கு இது மிகப் பெரிதான விழாவாக உருவெடுத்தது.

ஒரு கட்டத்தில் இந்து அமைப்புகளைச் சாராதவர்களும் குறிப்பாக திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட உருவாக்கப்படும் விழா கமிட்டிகளில் இடம்பெற்றனர். ஆனாலும், விநாயகரை வைப்பதற்காக போடப்படும் பந்தலில் இந்து முன்னணியின் கொடியோ, காவிக் கொடியோ வைக்கப்பட வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தும். ஆனால், வேறு கட்சியினர் வலுவாக இருக்கும் பகுதிகளில் குறிப்பாக வேலூர் போன்ற வட மாவட்டங்களில் இந்த விநாயகர் விழாக்கள் இந்து அமைப்புகளின் மேலாதிக்கத்தை புறக்கணித்தே பல தருணங்களில் நடத்தப்படுகின்றன.

விநாயகர் ஊர்வலங்கள் கலவரத்தில் முடிவது ஏன்?

விநாயகர் பொதுவாக அமைதியான கடவுளாகவும் குழந்தையைப் போல எல்லோராலும் ஏற்கத்தக்க கடவுளாகவும் தமிழ்நாட்டில் பார்க்கப்படுகிறார். ஆனால், விநாயகர் சதுர்த்திக்கான ஊர்வலங்கள் பல தருணங்களில் கலவரங்களில் முடிந்திருக்கின்றன. 1990ஆம் ஆண்டு சென்னையில் செப்டம்பர் 2ஆம் தேதி நடந்த கலவரம்தான் இது தொடர்பாக நடந்த முதல் கலவரம்.

1990ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் மிக விமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. விழாவுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அந்தப் பகுதியில் “இந்துவாக வாழ்வோம், இந்து தர்மத்தைக் காப்பாற்றுவோம்” என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. முகமது நபியின் பிறந்த நாளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பைக் கண்டித்து ‘இந்து சங்கம்’ என்ற பெயரில் சில அமைப்புகள் போஸ்டர் ஓட்டியிருந்தது பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி நெருங்க நெருங்க பதற்றம் மேலும் அதிகரித்தது.

செப்டம்பர் இரண்டாம் தேதி மதியம் புறப்பட்ட விநாயகர் ஊர்வலம், திருவல்லிக்கேணி மசூதியைக் கடக்கும்போது, ஊர்வலம் நிறுத்தப்பட்டு வெடி வெடிக்கப்பட்டது. பெரும் சத்தத்துடன் மேளம் அடிக்கப்பட்டது. அப்போது மசூதிக்குள் இருந்து யாரோ செருப்பை வீசியதாகச் சொல்ல மிகப் பெரிய கலவரம் வெடித்தது. காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஊர்வலங்களில் கலவரங்கள் ஏதும் நடக்காத நிலையில், 1995ல் பிரச்சனை ஏற்பட்டது. இதனால், 1996லிருந்து ஐஸ் ஹவுஸ் மசூதி வழியாக ஊர்வலங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கும் இந்து முன்னணியின் மூத்த தலைவரான ராம கோபாலன், ஒரு பிள்ளையார் சிலையுடன் மசூதி வழியாக போக முயல்வார். அவரை காவல்துறையினர் தடுத்து கைதுசெய்வார்கள். இது தொடர்ந்து நடந்து வருகிறது.

விநாயகர் ஊர்வலங்களில் கலவரம் என்பது சென்னையில் மட்டுமே இருந்துவந்த நிலையில், கோயம்புத்தூரில் 1997ல் நடந்த கலவரம், 1998ல் நடந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றுக்குப் பிறகு, அங்கேயும் இந்த ஊர்வலங்கள் பதற்றம் நிறைந்த ஒன்றாக மாறின.

மதுரையில் வெட்டிக்கொல்லப்பட்ட ராஜகோபாலன் இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்தபோது, 1994ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கீழக்கரையில் பிரதான வீதிகளின் வழியாக விநாயகர் ஊர்வலத்தை நடத்தினார். இதையடுத்து வெடித்த மோதலில், ராஜகோபாலன் காயமடைந்தார். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தத் தருணத்தில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடந்துவந்த போதிலும், அவரைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக மத்திய காங்கிரஸ் அரசு மீது குற்றம் சுமத்தியது பா.ஜ.க.

தமிழ்நாட்டில் வேறு எந்த விழாவும் கொண்டாடப்படாத வகையில், ஒரே நேரத்தில் கிராமம், நகரம், குக்கிராமங்கள் என எல்லா இடங்களிலும் கொண்டாடப்படும் நிகழ்வாக இந்த விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியிருக்கிறது இந்து முன்னணி.

இந்த ஊர்வலங்களில் கலந்துகொள்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டுவர்க்க இளைஞர்களும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளும்தான். இதில் பங்கேற்பவர்கள் தலையில் காவி நிறப் பட்டையை அணிந்துகொண்டு, கோஷங்களை எழுப்பியபடி செல்கின்றனர். இருந்தபோதும், பெரிய அளவில் பெண்கள் இந்த ஊர்வலங்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால், பெண்களின் பங்கேற்பை உறுதிசெய்ய இந்து முன்னணி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

“இந்த நாடு இந்து நாடு, இந்து மக்களின் சொந்த நாடு” என்ற கோஷமும் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷமும் முழங்கப்படுவது வழக்கம். சமீபகாலமாக ‘கணபதி பாபா மோரியா’ என்ற கோஷமும் முழங்கப்படுகிறது. துவக்கத்தில் ஒவ்வொரு நகரத்திலும் இந்த விநாயகர் சிலைகள் எல்லாம் ஒரே இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு ஒரே ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், தற்போது இவை இரண்டு, மூன்று ஊர்வலங்களாக பிரிந்து செல்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் இந்து அமைப்புகளே இந்த விநாயகர் ஊர்வலங்களைக் கட்டுப்படுத்துவதில்லை. சில இடங்களில் வேறு அரசியல் கட்சிகளும் இதுபோல விநாயகர் சிலைகளைப் பொது வெளியில் வைத்து, பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கின்றன. இப்படித்தான் செயல்பட வேண்டுமென்ற இந்து முன்னணியின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை இவர்கள் ஏற்பதில்லை. சில சமயங்களில் தாங்கள் வைத்த விநாயகர் சிலைகளை இந்த ஊர்வலங்களில் சேர்ப்பதோடு, அந்நிகழ்விலிருந்து விலகிக்கொள்கின்றன. தொடர்ந்து அந்தக் கட்சிக்காரர்கள் ஊர்வலங்களில் செல்ல மாட்டார்கள்.



தமிழ்நாடு அரசு தற்போது இப்படி ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படும் விநாயகர்கள் குறித்து பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. 10 அடி உயரத்திற்கு குறைவாகவே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளில் மாசு ஏற்படுத்தாத பொருட்களாலேயே விநாயகர் சிலைகள் செய்யப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது. தவிர, பொது இடத்தில் சிலைகளை வைத்தால், அந்த இடத்தை ஒட்டி இருக்கும் வீடு அல்லது கடையின் உரிமையாளரிடம் அனுமதிக் கடிதம் பெற வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமாக சிலைகள் செய்து விற்கப்படும் இடங்களில், சிலைகளை வாங்குபவர்களின் முகவரிகளும் சேகரிக்கப்படுகின்றன. சென்னையைப் பொறுத்தவரை, காசிமேடு, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் ஊர்வலம், இந்து அமைப்புகளுக்கு உதவியிருக்கிறதா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விநாயகர் ஊர்வல நிகழ்வு இந்து அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறதா என்று கேட்டால், ஆம் என்பதுதான் பதில். குறிப்பாக, 1982ல் துவங்கப்பட்ட இந்து முன்னணி அமைப்பு, இந்துக்களின் உரிமையைப் பாதுகாப்பதாகக் கூறி பல்வேறு விஷயங்களில் தலையிட்டாலும், விநாயகர் ஊர்வலங்களின்போதுதான் அதன் செயல்பாடுகள் மிகத் தீவிரமாக இருக்கின்றன.

மிகச் சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த அமைப்பு பல மாவட்டங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு உதவுகிறது. ஊர்வலங்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நிகழ்வை வைத்து மிகப் பெரிய அளவில் வளர்ந்த ஒரு இந்து அமைப்பாக, இந்து முன்னணியைச் சொல்லலாம்.

ஆனால், இதிலிருந்து பிரிந்த இந்து மக்கள் கட்சியும் ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலங்களில் பங்கேற்றாலும் அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு இந்த நிகழ்வுகள் பெரிய அளவில் உதவவில்லை.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் இந்த ஊர்வலங்களில் பங்கேற்கின்றனர். விநாயகர் நிகழ்வுகளுக்கு பிரச்சனை வரும் தருணங்களில் குரல்கொடுக்கின்றன. ஆனால், தங்களது முதன்மையான அடையாளமாக இந்த நிகழ்வை வைத்துக்கொள்வதில்லை. இதனை வைத்தே தங்கள் கட்சியின் வளர்ச்சி இருப்பதாகவும் கருதுவதில்லை. ‘இந்துக்கள் அனைவரும் ஒன்று’ என்ற உணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்வுகள் உதவினால், அவை ஒரு கட்டத்தில் வாக்குகளாக மாறலாம்; ஆனால், அதனை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற அளவுக்குத்தான் பா.ஜ.க. இந்த ஊர்வலங்களைப் பார்க்கிறது.

“இந்த ஊர்வலங்களைப் பொறுத்தவரை, இதுவரை இந்துத்துவம் சென்று சேராதவர்களிடம், அதனைக் கொண்டு சேர்க்க உபயோகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பிரதானமாக இருக்கும் இரண்டு ஜாதியைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் ஈர்க்கப்படுகின்றனர். அதேபோல தென் மாவட்டங்களில் ஒரு சில சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை இந்த ஊர்வலத்தை வைத்து ஒன்று திரட்டுகிறது இந்து முன்னணி. சென்னையில் நடக்கும் ஊர்வலத்திற்காக, செங்கல்பட்டு, மகாபலிபுரம், கல்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து ஆட்களைத் திரட்டுகிறார்கள். இதற்குப் பணமும் தருகிறார்கள். இந்த ஊர்வலங்களில் பொது மக்கள் மிக மிகக் குறைவாக கலந்துகொள்கிறார்கள். அல்லது கலந்துகொள்வதே இல்லை. இருந்தபோதும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பாலும் விஷ்வ ஹிந்து பரிஷத்தாலும் அடைய முடியாத இடங்களில் இந்து முன்னணி இந்த விநாயகர் ஊர்வலத்தின் மூலம் சென்று சேர்ந்திருக்கிறது” என்கிறார் பெங்களூர் கீதம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான அருண்குமார்.

இந்து மதத்தை முன்னிறுத்தும் பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு இந்த ஊர்வலங்களும் அதனால் ஏற்படும் ஒருங்கிணைவுகளும் உதவுகின்றதா? இல்லை என்கிறார் அருண்குமார். “இது வாக்குகளாக மாறுவதில்லை. இதில் கலந்துகொள்பவர்கள் பெரிய அளவில் பா.ஜ.க. ஆதரவாளர்களாக மாறுவதில்லை. இந்து முன்னணியும் அதை நோக்கி நகர்வதில்லை. 2016 தேர்தலில் இந்து முன்னணி பல இடங்களில் பா.ஜ.கவிற்குப் பதிலாக அ.தி.மு.கவையே ஆதரித்தனர். சுருக்கமாகச் சொல்வதானால், கன்னியாகுமரியைத் தவிர வேறு மாவட்டங்களில் இந்த ஊர்வலங்கள் இந்து ஒருங்கிணைப்பை உருவாக்க உதவவில்லை” என்கிறார் அருண்குமார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பொதுச் சமூகத்தில் திராவிடக் கட்சிகளோடு ஒப்பிடுகையில் இந்து அமைப்புகளுக்கான ஆதரவு என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார சூழலில் தங்களுக்கு மறுக்கப்படும் இடத்தை இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் மூலம், சிறிது நாட்களுக்காவது இந்த அமைப்புகள் கைப்பற்றிவைத்துக் கொள்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.