ஆவின் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க அனுமதி: உணவு பாதுகாப்புத் துறை தகவல்

சென்னை: ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிப்பதாக, உயர் நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சென்னை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “உணவு பாதுகாப்பு விதிகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், அலுமினியம் ஃபாயில்களில் அடைத்து விற்க அனுமதிக்கிறது. ஆவின் நிறுவனம் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகிறது.

குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக 33.84 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக 384 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27.62 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 363 உரிமையியல் வழக்குகளில் 54.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு எதிராக 13 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1.79 லட்சம் ரூபாய் அபராதமும், 492 உரிமையியல் வழக்குகளில் 61.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.