61க்கும் 28க்கும் டும்டும் புதுச்சேரி இளம்பெண்ணை மணந்த பிரான்ஸ் தாத்தா: குடும்பத்துக்கு ரூ.2.5 கோடி தந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வைரல்

புதுச்சேரி: புதுச்சேரியில் இளம்பெண்ணை பிரான்ஸ் தாத்தா திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியை சேர்ந்த முதியவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 75 வயதான அவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது மனைவி இறந்ததில் இருந்து, தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்துக்கொள்ள துணை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் உறவினர்களிடம் புலம்பியுள்ளார். இதையடுத்து அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணிடம் நிலமையை எடுத்துக்கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். முதியவரை திருமணம் செய்து கொண்டு பிரான்சு செல்லவும் அந்த பெண் சம்மதித்துள்ளார். நேற்று முன்தினம் காலை புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது முதியவர் ஒருவரும் இளம் பெண்ணும் மாலை மற்றிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து மணக்குள விநாயகர் கோயில் அறங்காவல் குழுவினரிடம் கேட்டபோது: இருவரின் பெயர், எந்த ஊர் என்ற விபரங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியாது. அவர்கள் மேஜரா என்பதை மட்டும்தான் பார்ப்போம். மேலும் திருமணம் செய்து கொள்ள எம்எல்ஏ ஒருவர் பரிந்துரை கடிதமும் வழங்கியிருந்தார். இதனையேற்று திருமணம் செய்து கொள்ள அனுமதித்தோம். மணப்பெண்ணுக்கு 28 வயதும், மணமகனுக்கு 61 வயதும் ஆகிறது என தெரிவித்தனர். இதற்கு மேல் எங்களுக்கு தகவல் தெரியாது என்றனர். இதற்கிடையே பிரான்சு குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்து கொண்டால், பிரான்சில் செட்டில் ஆகலாம் என்பதாலும், முதியவர் தரப்பில் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.2.5 கோடி வழங்கப்பட்டதாகவும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.