‘வீர்’ சாவர்க்கர் என்று பாஜகவினரால் அழைக்கப்படும் சாவர்க்கர் பற்றிய விவாதங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. சாவர்க்கரை முன்னிலைப்படுத்தும் அடுத்தக்கட்ட முயற்சியாக பாடபுத்தக்கத்தில் இடம் பெற்றுள்ள அவர் தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதியில் சாவர்கர் பற்றி ஒரு குறிப்பு உள்ளது.
அதில், அந்தமான் சிறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லாத அறையில் அதாவது வெளிச்சம் வரக்கூட சிறிய ஓட்டை இல்லாத அறையில் சாவர்கர் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த அறைக்கு தினந்தோறும் புல்புல் பறவைகள் வந்து செல்வதுண்டு. அந்த புல்புல் பறவையில் இறகுகளில் ஏறி ஒவ்வொருநாளும் சாவர்க்கர் தாய்நிலம் சென்று வந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. உண்மைக்குப் புறம்பானதை மாணவர்களுக்குக் கூறி வரலாற்றைத் திரிப்பதா என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. புல்புல் பறவையின் மொத்த எடையே சுமார் 28 கிராம்தான். குறைந்த பட்சம் 23 கிராமில் இருந்து அதிகபட்சம் 45 கிராம் வரை இருக்கும். அதன் நீளம் 7 இன்ச் வரை இருக்கும். எனவே, சாவர்க்கரை புல்புல் பறவை தூக்கிச் சென்றது என கூறப்படுவது அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது.
சாவர்க்கர் புல்புல் பறவை சர்ச்சை ஓயாத நிலையில், விலங்குகள், பறவைகளோடு தொடர்புபடுத்தி பிரபலமான தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக, பிரதமர் மோடி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
ஆகியோர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தேன், ஆமைக்கறி சாப்பிட்டேன், அரிசிக்கப்பல், ஏகே 47 எடுத்து வெச்சு சும்மா படபடபடன்னு சுட்டேன் என்று அடிக்கடி பேசி வருபவர். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் செமையாக ட்ரோல் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால், “இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை மறுக்க வேண்டும் என்றால் விடுதலை புலிகள்தான் மறுக்க வேண்டும்.” என்று கூறி சீமானோ ஈசியாக கடந்து போய்விடுவார். அதேபோல், பிரதமர் மோடி முதலை மற்றும் மயில்களுக்கு பெயர் போனவர்.
கொரோனா காலகட்டத்தில் தன்னுடைய லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் மயில்களுக்கு உணவு அளிக்கும் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. கொரோனா நோய்த்தொற்றின் போது பிரதமரின் ஃபோட்டோஷூட் என்ற விமர்சனங்களையும் பெற்றது.
மோடி@20 என்ற பிரதமரின் அரசியல் பயணத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித் ஷா, “பிரதமர் அலுவலகத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது மயில் ஒன்று கண்ணாடியை அதன் அலகினால் தட்டிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, மயில் பசியுடன் இருப்பதை உணர்ந்த பிரதமர் மோடி, பறவைக்கு உணவளிக்குமாறு தனது ஊழியர்களிடம் கூறினார்.” என்றார். பிரதமர் அலுவலகத்தில் பசியுடன் இருந்த மயிலுக்கு உணவளிப்பதை உறுதி செய்வதற்காக கூட்டம் நிறுத்தப்பட்ட சம்பவத்தை விவரித்த அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உணர்திறன் கொண்டவர் என்று புகழாரம் சூடினார்.
அதேபோல், தான் 14 வயது சிறுவனாக இருந்த போது உள்ளூரில் இருந்த ஒரு குளத்துக்கு குளிக்கச் சென்று போது ஒரு முதலைக் குட்டியை பார்த்து அதை தனது வீட்டுக்கு கொண்டு வந்தாகவும், ஆனால் இது தவறு என்று தனது அம்மா உணர்த்தியதை தொடர்ந்து அந்த முதலையை மீண்டும் குளத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.