ராய்பூர்: ஜார்க்கண்டின் ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரிய அரசியல் நெருக்கடியின் காரணமாக, எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சியான பாஜக பக்கம் போகாமல் இருக்க, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் ராய்பூரில் உள்ள மேஃபேர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி, ஆளும் கூட்டணியின் எம்எல்ஏக்களை தங்கள் வசப்படுத்திய பாஜக, ஆளும் அரசுகளை கவிழ்த்தது போல் இங்கும் முயற்சிக்கலாம் ஜார்க்கண்ட்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்தே முன்னெச்சரிக்கையாக எம்எல்ஏக்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
அதற்கேற்ப நேற்று மதியம் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் இருந்து இரண்டு பேருந்துகளில் ராஞ்சி விமான நிலையத்திற்கு எம்எல்ஏக்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து தனி விமானம் மூலம் ராய்பூர் அழைத்து செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக பேசியுள்ள முதல்வர் ஹேமந்த் சோரன், “இது ஒரு ஆச்சரியமான நடவடிக்கை அல்ல. இது அரசியலில் நடக்கும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்
இது ஒன்றும் புதிதல்ல. ஜனநாயக முறையில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அல்லாத அரசுகள் சீர்குலைக்கப்படுகின்றன. அதிலிருந்து எங்கள் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கவும் அவர்களை ஒன்றாக வைத்திருப்பதற்கான எங்கள் தந்திரமான நடவடிக்கையே இது” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, ராய்பூர் வந்த எம்எல்ஏக்களை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.