ஐதராபாத்: தமிழில் ‘கணம்’என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’என்ற பெயரிலும் வரும் 9ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். கார்த்திக் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகை அமலா, 31 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ளார். சர்வானந்த், ரீது வர்மா, நாசர், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் நடித்துள்ளனர். வாழ்க்கை யில் ஒவ்வொரு கணமும் நமக்கு முக்கியம் என்பதை சொல்லும் படம், அறிவியல் புனைகதையை வைத்து உருவாகியுள்ளது. டைம் டிராவல் மற்றும் அம்மா சென்டிமெண்ட் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வோம் என்று படத்தில் சொல்லியிருக்கின்றனர்.
இதில் நடித்தது குறித்து அமலா அளித்துள்ள பேட்டியில், ‘நாகார்ஜூனாவுடன் திருமணம் நடந்த பிறகு ஐதராபாத்தில் குடியேறி னேன். கணவர், குடும்பம், மகன் அகில் விஷயங்களை கவனித்துக்கொள்வது என்று வாழ்க்கை வேறுவிதமாக கடந்து சென்றது.
இதற்கிடையே பல மொழிகளில் இருந்து என்னைத்தேடி வந்த சில வாய்ப்புகளை தவிர்த்தேன். தமிழில் நான் நடித்து 31 வருடங்களாகிவிட்டது. இந்நிலையில்தான் கார்த்திக் சொன்ன கதையை நான் கேட்டு, கண்டிப்பாக இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆக வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன். முழு படத்தையும் பார்த்தேன். எனக்கு மிகவும் திருப்தி. நானே தமிழில் டப்பிங் பேசியிருக்கிறேன். ஐதராபாத்தில் என் வீட்டுக்கு கார்த்திக் வந்தபோது, எனது கையால் ஏதாவது சமைத்துப் பரிமாற வேண்டும் என்று கேட்டார். நான் சமையலறை பக்கம் சென்று பல வருடங்களான நிலையில், அவரது அன்புக்கும், பாசத்துக்கும் மரியாதை ெகாடுத்து சமையல் அறைக்கு சென்று பாயாசம் தயார் செய்து பரிமாறினேன். ‘கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறேன்’என்று கூறியுள்ளார்.