பூவில் காணப்படும் ஒருவகை நச்சுப்பொருளான அகோனைட் எனப்படும் ஒன்று என்று சந்தேகம்
நால்வர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது
ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள Delight Restaurant & BBQ உணகவகத்தில் சாப்பிட்ட சுமார் 12 பேர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், மருத்துவ உதவியை நாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் நால்வர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் யார்க் பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி, டாக்டர். பேரி பேக்ஸ் குறித்த சம்பவம் தொடர்பில் புதிய சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில், இது பல்வேறு மூலிகைகள் அல்லது வேர்கள் அல்லது குறிப்பாக பூவில் காணப்படும் ஒருவகை நச்சுப்பொருளான அகோனைட் எனப்படும் ஒன்று என்று சந்தேகிப்பதாக டாக்டர். பேரி பேக்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்களின் சந்தேகத்தை உறுதி செய்யும் நோக்கில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நச்சுப்பொருளானது திட்டமிட்டு உணவில் கலந்திருக்கலாம் அல்லது தவறுதலாக அவ்வாறு நடந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சந்தேகத்திற்குரிய விஷம் வேண்டுமென்றே உணவில் கலந்துள்ளனர் என்று நம்புவதற்கு இந்த நேரத்தில் எந்த காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அகோனைட் நச்சுப்பொருளானது ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ள டாக்டர். பேரி பேக்ஸ், இதனால் வயிற்றுப்போக்கு, வலிப்பு அல்லது அரித்மியாவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு குறித்த உணவகம் ஒத்துழைப்பு தருவதாகவும், கடந்த மே மாதத்தில் குறித்த உணவகமானது சுகாதார பரிசோதனையில் தேர்ச்சி பெற்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.