சமூக ஊடகங்களில் பழைய காணொலி காட்சி ஒன்று பரவியது. அந்தக் காணொலியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ரா , “இந்து கோயில்களில் உள்ள வருமானத்தை கருத்தில் கொண்டு இடதுசாரிகள் கோயில்களை கட்டுப்படுத்த நினைக்கின்றனர்” என்று கூறுவது போல் இருந்தது.
இந்தக் கருத்துகளை கேரளத்தின் இடதுசாரிகள் நிராகரித்தனர். மேலும் வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிதியையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
கேரளத்தில் கோயில்களை நிர்வகிப்பது யார்?
கேரளத்தில் கோயில்கள் மாநில அரசின் கீழ் உள்ள அறக்கட்டளை, தனியார் அறக்கட்டளை, நாயர் சர்வீஸ் சொசைட்டி, ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், கவுடா சரஸ்வத் பிராமண சபா போன்ற சமூக அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
இது தவிர தீவார சபா, விஸ்வகர்மா சபா, ஐயப்ப சேவா சமிதி, பாஜக ஆதரவு பெற்ற கேரள ஷத்திரிய சம்ரக்ஸனா சமிதி, தனிகுடும்பங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் உள்ளன.
மாநிலத்தில் எத்தனை கோயில்கள் உள்ளன?
கேரளத்தில் 5 மாநில அரசின் கீழ்வரும் தன்னாட்சி தேவஸ்தான அறக்கட்டளைகள் உள்ளன. இதன் கீழ் 3,058 கோயில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் கீழ் புகழ்பெற்ற மலைக் கோயிலான சுவாமி ஐயப்பன் கோயில் உள்பட 1250 கோயில்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
கொச்சின் தேவஸ்தானத்தின் கீழ் 406 கோயில்களும், மலபார் தேவஸ்தானம் வாரியத்தின் கீழ் 1357 கோயில்களும், குருவாயூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 11 கோயில்களும், கூடல் மாணிக்கம் வாரியத்தின் கீழ் 12 கோயில்களும் வருகின்றன.
மாநிலத்தில் இடதுசாரி அரசாங்கம் தேவஸ்தானம் அமைச்சரவையும் உருவாக்கியுள்ளது. தேவஸ்தானத்தின் அமைச்சராக கே. ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகிக்கிறார்.
கோயில் பணியாளர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?
அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், அந்தந்த வாரியங்களால் நியமிக்கப்படுகின்றனர். முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) ஆட்சி, இந்த செயல்முறையை சீரமைக்க தேவசம் ஆள்சேர்ப்பு வாரியத்தை கொண்டு வந்தது.
2017 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் வாரியம் முதன்முறையாக அதன் கீழ் உள்ள பல்வேறு கோவில்களில் தலித்துகளை அர்ச்சகர்களாக நியமித்தது. பின்னர், கொச்சி போர்டு பிராமணர் அல்லாத அர்ச்சகர்களையும் நியமித்தது.
இந்தக் கோயில்களுக்கு ஆட்சேர்ப்பு இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1951 இன் படி செய்யப்படுகிறது, பாரம்பரியமாக குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் பதவிகள் தவிர. தற்போதுள்ள விதிமுறைகளின்படி, பட்டியலின (எஸ்சி) மக்களுக்கு 10% இடஒதுக்கீடு கிடைக்கும், அதே சமயம் பழங்குடியின (எஸ்டி) மக்களுக்கு 2% இட ஒதுக்கீடு கிடைக்கும்.
கோயில் வருமானம்
கேரளாவில் உள்ள கோயில்கள் தங்களின் வருவாயை மாநில அரசுடன் பகிர்ந்து கொள்வதில்லை. அதற்கு பதிலாக, ஐந்து தேவசம் போர்டுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசிடமிருந்து பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2016-17 முதல் 2019-2020 நிதியாண்டுகளுக்கு இடையில், கேரளாவில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு மாநில அரசு ரூ.351 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு தவிர, திருவிதாங்கூர் வாரியம் 2018 வெள்ள நிவாரணம் மற்றும் தொற்றுநோய் உதவியாக 120 கோடி ரூபாய் கூடுதலாகப் பெற்றது.
இதேபோன்ற நெருக்கடி உதவியின் ஒரு பகுதியாக, கொச்சி வாரியத்திற்கு ரூ.25 கோடியும், மலபார் வாரியத்துக்கு ரூ.20 கோடியும், கூடல்மாணிக்கம் வாரியத்துக்கு ரூ.15 லட்சமும் ஒதுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, தற்போதைய இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) ஆட்சி 2021 மே மாதம் பதவியேற்ற பிறகு, திருவிதாங்கூர் வாரியத்திற்கு ரூ.20 கோடி மானியம் வழங்கப்பட்டது. அதேபோல், மலபார் வாரியமும் ரூ.44 கோடி பெற்றது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“