மும்பை : பாலிவுட் பிரபல நடிகரான கமால் ஆர் கான், மும்பை ஏர்போர்ட்டில் மாலட் போலீசாரால் கைது செய்யப்பட்டு, போரிவாலி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் கேஆர்கே என அழைக்கப்படும் கமால் ஆர் கான், பாலிவுட் படங்கள் பற்றியும், நடிகர்கள் பற்றியும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி, சிக்கலில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டவர்.
2020 ம் ஆண்டு, மறைந்த நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டார் கமால் கான். இது தொடர்பாக சிவசேனா கட்சி தலைவர் ராகுல் கனல் என்பவர் கமாலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார்.
கமாலுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்
இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் கமால் மீது வழக்கு தொடர்ந்தனர். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கமால் கானை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கமல் கான் மும்பையில் இல்லை.
சல்மான் கான் தாக்கல் செய்த மனு
இதைத் தொடர்ந்து 2021 ம் ஆண்டு நடிகர் சல்மான் கானும் மும்பை கோர்ட்டில், கமால் கானுக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அவதூறு பரப்புவதை தடுக்கும் வகையில் கமால் கானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவதூறு பரப்பும் வகையில் அவர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவதை தடுக்க வேண்டும். நடிகர்கள் குறித்த அவதூறு கருத்துக்கள், வீடியோக்கள் அல்லது வேறு ஏதாவது ஒன்றை அவர் பதிவிடுவதை தடுக்க வேண்டும் என அவதூறு வழக்கு பதிவு செய்தார்.
சல்மான் படத்தையும் விடலியா
சல்மான் கான் நடித்த ராதே படம் ரிலீசான சமயத்தில் அந்த படம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனத்தை வெளியிட்டதால் கமால் கான் மீது சல்மான் கான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோர். தொடர்ந்து கமால் கானுக்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட கமால்
இந்நிலையில் ஆகஸ்ட் 29 ம் தேதி கமால் கான் மும்பை வந்திறங்கினார். மும்பை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய அவரை போலீசார் கைது செய்து மலட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு அவர் கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டார்.