புதுடெல்லி: உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார் கவுதம் அதானி. அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தினசரி அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய புதுப்பித்தலில், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவர் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டை முந்தி உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு ரூ.10.85 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்பட்டியலில் பில் கேட்சை (சொத்து மதிப்பு ரூ.9.24 லட்சம் கோடி) முந்தி 4வது இடத்தை பிடித்தார் அதானி.
ஏற்கனவே ஆசியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில், சீனாவின் ஜாக் மா, இந்தியாவின் முகேஷ் அம்பானி ஆகியோரை முந்தி அதானி முதல் இடத்தை பிடித்தவர். தற்போது எந்த ஆசிய தொழிலதிபர்களும் செய்யாத சாதனை அதானி செய்துள்ளார். இப்பட்டியலில் அமெரிக்காவின் எலான் மஸ்க் ரூ.19.82 லட்சம் கோடியுடன் முதல் இடத்திலும், ஜெப் பெசோஸ் ரூ.12.08 லட்சம் கோடியுடன் 2வது இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானி ரூ.7.26 லட்சம் கோடியுடன் 11வது இடத்தில் உள்ளார்.