ஊட்டி: ஊட்டியில் இரண்டாம் சீசன் நாளை துவங்கும் நிலையில், லாட்ஜ் மற்றும் காட்டேஜ் கட்டணங்கள் உயரும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரியில் இரு சீசன் கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதம் முதல் சீசனாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதம் 2ம் சீசனாவும் கடைபிடிக்கப்படுகிறது. நாளை முதல் இரண்டாம் சீசன் தொடங்குகிறது. இதனால், இரண்டாம் சீசனின் போதும் அறை கட்டணங்களில் மாற்றம் செய்யப்படும். வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணங்களை காட்டிலும் சற்று அதிகமாக அறை கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக இரண்டாம் சீசன்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், இம்முறை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போது சுற்றுலா பயணிகளை வரவேற்க அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் தயாராகி வருகின்றன. அதேபோல், அறை கட்டணங்களையும் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது வசூலிக்கப்பட்டு வரும் அறை கட்டணங்களை காட்டிலும் சற்று அதிகமாக வசூலிக்க வாய்ப்புள்ளதாக லாட்ஜ் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தற்போது ரூ.1000 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் ரூ.1250 முதல் 1500 வரை வசூலிக்க வாய்ப்புள்ளது.