புதுச்சேரி: புதுச்சேரியில் விவசாய கடன் ரூ.13 கோடியை தள்ளுபடி செய்வதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்களின் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு ரூ.12 வழங்கப்படும். கட்டிட நல வாரிய தொழிலாளர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.7,000ல் இருந்து ரூ.15,000 ஆகவும், மகப்பேறு உதவித்தொகை ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் நலவாரியம் அமைக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு மனைப்பட்டா வழங்குவதற்கு சொசைட்டி ஆரம்பித்து, அதன் மூலமாக இடம் தேர்வு செய்து ஜிஎல்ஆர் மதிப்பின்படி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2022ம் ஆண்டுக்கான விவசாய கடன் சுமார் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.