சார்பட்டா பரம்பரை என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை தொடர்ந்து ரஞ்சித் ஒரு காதல் கதையை இயக்குகிறார் என்ற தகவல் வெளிவந்ததில் இருந்து இப்படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இதற்கு முன்னால் பா ரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தியை முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் பிறகு மெட்ராஸ், காலா, கபாலி போன்ற படங்களில் சமூகப் பிரச்சனையை முன்னிறுத்தி எடுத்திருந்தார். மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காளிதாஸ் ஜெயராமன் ,சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் பா ரஞ்சித் படங்களில் தொடர்ந்து நடிக்கும் நடிகர்கள் அனைவரும் நடித்துள்ளனர்.
துஷாரா விஜயன், காளிதா ஜெயராம், ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் மேடை நாடகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கூட்டத்தில் கலையரசன் நடிப்பு கற்றுக்கொள்ள வருகிறார். பின்பு காதலை மையமாக வைத்து ஒரு மேடை நாடகத்தை உருவாக்குகின்றனர், அதனுள் நடக்கும் பல கதைளே நட்சத்திரம் நகர்கிறது. ஆண் பெண் காதல், திருநங்கைகளின் காதல், ஓரினச்சேர்க்கை, ஜாதி, அரசியல், நாடக காதல் என அனைத்தும் சேர்ந்த கலவையாக இப்படத்தினை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் பா ரஞ்சித். பேப்பரில் எழுதுவதை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினமான ஒன்று, அதனை மிகவும் எளிதாக எடுத்திருக்கிறார் ரஞ்சித். எழுத்தில் உள்ள வலிகளை நடிப்பின் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இடையே உள்ள காதல் எப்படி இணைந்து, பிரிகிறது என்பதை பட முழுக்க அழகாக கூறியுள்ளனர். கதை ஆரம்பித்த சிறிது நேரத்திற்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் படம் பார்க்கும் ஆடியன்சை போலவே கலையரசலும் இந்த மேடை நாடக கதைக்குள் நுழைகிறார். ஆரம்பத்தில் அவரது செயல்கள் மற்றும் பேச்சு நம்முடன் ஒன்றிணைக்க வைக்கிறது. குறிப்பாக ஒரு விருந்தில் குடித்துவிட்டு அவர் செய்யும் ரகளை காட்சிகள் பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் கலையரசனின் வீட்டில் நடக்கும் காட்சிகள் அவ்வளவு எதார்த்தமாகவும் நம் கண் முன்னே பார்த்த பல விஷயங்களை காட்டுகிறது.
சார்பட்டா பரம்பரை மூலம் நமக்கு அறிமுகமான துஷாரா விஜயனுக்கு, இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தது அவருக்கு அதிர்ஷ்டம் தான். படத்தில் உள்ள மற்ற நடிகர்களை தாண்டி அதிகம் ஸ்கோர் செய்வது துஷாரா விஜயன் தான். வசனங்களை தாண்டி பார்வையாலும், கண்களாலும், தன் உடல் மொழியாலும் அவர் சொல்லும் விஷயங்கள் பல இடங்களில் கை தட்டும் பாராட்டும் கிடைக்கிறது. பா ரஞ்சித்தின் படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ அதில் இரண்டு மடங்கிற்கு அவரது கதாபாத்திரம் வலுவாக எழுதப்பட்டுள்ளது. படம் முழுக்க பூனையை வைத்து சொல்லப்பட்ட குறியீடுகள் பிரமாதம்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் ஓடும் இந்த கதையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. மேலும் சந்தோஸ் நாராயணனை ரஞ்சித் எந்த அளவுக்கு மிஸ் செய்து உள்ளார் என்பது படம் பார்க்கும்போது ஞாபகத்துக்கு வருகிறது. முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி அதனை ஈடு கட்டுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் அல்டிமேட். படம் முழுக்க ஜாதியை மையமாக வைத்து வரும் காட்சிகளும், வசனங்களும் திணிக்கப்படாமல் கதையினுள் ஒரு அங்கமாய் இருப்பது பாராட்டுகிறது. யாரையும் குறிப்பிட்டு சொல்லமால் இறங்கி அடித்து இருக்கிறார் ரஞ்சித். வசனங்களால் படம் நிரம்பி உள்ளதால், எந்த அளவிற்கு அனைவருக்கும் சென்றடையும் என்பது சந்தேகமே. நட்சத்திரம் நகரிக்கிறது திரையை விட்டு நம் கண்களை நகர்த்தாமல் இறுக்கிப்பிடிக்கிறது.