திருமலை: தெலங்கானாவில் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டதாக ஆத்திரமடைந்த மவோயிஸ்டுகள், பஞ்சாயத்து துணை தலைவரை கடத்திக்கொன்று சடலத்தை கிராமத்தில் வீசினர். மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கடிதம் வைத்திருந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், கொத்தகூடம் மாவட்டம், செர்லா மண்டலம், குர்னப்பள்ளி கிராம பஞ்சாயத்து துணை தலைவர் இர்பா ராமாராவ். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். இரவு நேரத்தில் அவரது மனைவி கனகம்மாவை எழுப்பி, ராமராவை தங்களுடன் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். மேலும் குடும்பத்தினர் தடுக்க முயன்றும் அதனை கேட்காமல் ராமாராவை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.
நேற்று அதிகாலையில் மாவோயிஸ்டுகள் அவரை மீண்டும் கிராமத்திற்கு அழைத்து வந்து, கோடரியால் அவரது தலையில் அடித்து கொலை செய்து சடலத்தை வீசி சென்றனர். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராமாராவ் சடலத்தின் அருகே சிபிஐ (மாவோயிஸ்ட்) கமிட்டியின் செர்லா சபரி எழுதியதாக கடிதம் ஒன்று இருந்தது. அதில், இறந்த ராமாராவ் போலீஸ் இன்பார்மராக பணிபுரிந்து வந்ததாகவும், அதனால் அவர் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் வழங்கும் பணத்திற்கு பேராசைப்பட்டு பொதுமக்கள் யாரும் போலீஸ் இன்பார்மர்களாக மாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.