சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான சிவக்குமார் உள்ளிட்டவர்களை அரசு விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக, தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தின் செய்திக் குறிப்பில் வெளியான தகவல் தமிழ்நாடு அரசியல் அரங்கில் பரபரப்பரைப் பற்றவைத்துள்ளது.
2016 செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, அங்கேயே உடல் நலன் குன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின. கூடுதலாக, ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓ.பி.எஸ்ஸும் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதிமுக-வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தபோது, அதை நிபந்தனையாகவும் முன்வைத்தார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை 25.09.2017 அன்று அப்போதைய அ.தி.மு.க அரசு அமைத்தது.
தொடர்ந்து, ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. நடுவில் அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக விசாரணைக்குத் தடை விதித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. ஓ.பி.எஸ், சசிகலாவின் உறவினர் இளவரசி, அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராகி தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். 14-வது முறை கால நீட்டிப்புக்குப் பிறகு, கடந்த 27-ம் தேதி, ஆங்கிலத்தில் 500 பக்கமும் தமிழில் 608 பக்கமும் கொண்ட ஆணையத்தின் அறிக்கையை முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தமிழக முதல்வரிடம் தாக்கல் சமர்பித்தார். ஆனால், அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து நேரடியாக பத்திரிகையாளர்களிடம் அவர் எதையும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வெளியான செய்திக்குறிப்பில், சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட நான்குபேரை அரசு விசாரணைக்குப் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அடுத்தகட்டமாக இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்..,
ப்ரியன் :
“ஆணையம் என்பது அடுத்த என்ன செய்யவேண்டும் என்பதை பரிந்துரைக்கதான் முடியும். இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசாங்கம்தான் எடுக்கும். ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை என ஆணையம் முடிவுக்கு வந்திருந்தால் மீண்டும் நான்கு பேரை விசாரிக்கச் சொல்லியிருக்க மாட்டார்கள். அதனால் அவருக்குச் சில சந்தேகமிருப்பதாகத்தான் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தவிர, இந்த நான்குபேரில் சசிகலாவைத் தவிர்த்து மற்ற மூன்றுபேரும், நேரடியாக ஆஜராகி தங்களது பதில்களைத் தெரிவித்துவிட்டனர். இந்தநிலையில் அவர்களிடமும் திருப்பி விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் என்றால் வலுவான காரணம் எதுவும் இல்லாமல் இருக்காது. அதுகுறித்து நமக்கு இப்போது எதுவும் தெரியாது. ஆனால், அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அடுத்து, இந்த பரிந்துரைகளை வைத்து, நான்கு பேரிடமும் விசாரணை செய்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அரசு நினைத்தால் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்வார்கள். இல்லை இயற்கையாகத்தான் இறந்துபோனார்கள் என்கிற முடிவுக்கு வந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது. சட்டமன்றத்தில் ஆணையத்தின் முழுமையான அறிக்கையை முன்வைக்கும்போதுதான் அது நமக்குத் தெரியவரும். இந்த நான்கு பேரை விசாரிப்பது மட்டுமின்றி வேறு பரிந்துகளையும்கூட ஆணையம் முன்வைத்திருக்கலாம். அதுவும் நமக்கு அப்போதுதான் தெரியவரும். பெரும்பாலும், மீண்டும் ஆறுமுகசாமியையே இந்த வழக்கை விசாரிக்க அரசு உத்தரவிட்டு இணைப்பு அறிக்கையைக் கொடுக்க அரசு உத்தரவிடலாம். அதையும் அட்வகேட் ஜெனரல் முன்வைத்து, அவர்கள் கொடுக்கும் அறிக்கையோடு சேர்த்து சட்ட ஆலோசனைகளைப் பெற்று சட்டமன்றத்தில் முன்வைப்பார்கள்..”
தராசு ஷ்யாம் ;
“அப்போலோமருத்துவமனையின், மருத்துவசேவையில் எந்தக் குறைபாடும் இல்லையென்று எய்ம்ஸ் மருத்துவக்குழு தெளிவாக அறிக்கை கொடுத்துவிட்டது. ஆனால், அப்போலோ மருத்துவமனையில் சி.சி.டி.வி கேமராவை ஆஃப் செய்தது, வெளிப்படைத்தன்மை இல்லாதது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்த சந்தேகங்கள் இருக்கின்றன. உதாரணமாக, சி.சி.டி.வியை சசிகலாவோ, ராம் மோகன் ராவோ, விஜயபாஸ்கரோ சொல்லிதான் நீக்கியதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கலாம். அதனால்தான், ஆணையத்தின் பரிந்துரைப்படி மேலதிக நடவடிக்கைகளை அமைச்சரவை எடுத்திருக்கிறது. ஆனால், அப்போது பொறுப்பு முதல்வராக இருந்த ஓ.பி.எஸ், சுகாதாரச் செயலாளராக அப்போது இருந்த ராதாகிருஷ்ணன் பெயரைச் சேர்த்திருக்கலாம். எக்மோ கருவியை அகற்றியதற்கு கையெழுத்திட்டவர்களில் இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். அதேபோல, இதில் மருத்துவர் சிவக்குமாரைச் சேர்த்தது பொருத்தமாக இல்லை. இவற்றையெல்லாம் தாண்டி, ஜெயலலிதா பொதுவாக சிகிச்சைகளுக்கு ஒத்துழைக்காத ஒரு நபர் (un cooperative patient). எனக்கு தனிப்பட்ட முறையில் அது நன்றாகத் தெரியும். சி.சி.டி.வியை அகற்ற ஜெயலலிதாவே சொல்லியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது” என்று முடித்தார்.