நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
இயக்கம்: அஜய் ஞானமுத்து
சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகி உள்ள படம் கோப்ரா.
சிட்டிசன், தசாவதாரம், தூம் 2 உள்ளிட்ட பல படங்களில் நாயகர்கள் வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு நடத்தி அசத்தி இருப்பார்கள்.
அதே வரிசையில் கிட்டத்தட்ட 8 கெட்டப்புகளில் சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் தெளிவா இருக்கா? இல்லை மண்டையை போட்டுக் குழப்பியதா என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..
என்ன கதை
ஸ்காட்லாந்தில் ஒரு இளவரசர் கொல்லப்படுகிறார். இந்தியாவில் ஒரு பெரிய அரசியல்வாதி கொல்லப்படுகிறார். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஹை புரொஃபைல் கொலைகள் நடைபெறும் நிலையில், அதை கண்டுபிடிக்க இன்டர்போல் அதிகாரியாக அஸ்லான் (இர்ஃபான் பதான்) குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அப்படியே கட் பண்ணா சாதாரண கணக்கு வாத்தியாராக வாழ்ந்து கொண்டிருக்கும் மதியழகனை (விக்ரம்) கேஜிஎஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி துரத்தி துரத்திக் காதலிக்கிறார். கணக்கு வாத்தியார் ஏன் இதுபோன்ற பெரிய கொலைகளை செய்கிறார் அதற்கு என்ன காரணம் என்பது தான் கோப்ரா படத்தின் கதை.
சியான் விக்ரம் மிரட்டல்
படத்தில் 7, 8 கெட்டப் இருக்கு சார் என்றதுமே ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒவ்வொரு விதமாக ரெடியாகி விடுவார் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். கோப்ரா படத்திலும் அதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் சியான் விக்ரம். தன்னை சிறு வயதில் இருந்து வளர்த்து வரும் நெல்லயைப்பன் (கே.எஸ். ரவிக்குமார்) சொல்லும் டாஸ்க்குகளைத் தான் வேஷம் போட்டு முடித்து வருகிறார் விக்ரம். இடைவேளையில் வரும் அந்தவொரு ட்விஸ்ட் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. எதிர்பார்க்கலல சியான் விக்ரம் இப்படியொரு கம்பேக் கொடுப்பாருன்னு எதிர்பார்க்கலலன்னு சொல்ல வைக்கிறது.
பியூட்டிஃபுல் மைண்ட் மாதிரி
சியான் விக்ரமிற்கு எப்போதும் மூன்று கேரக்டர்கள் அவரை சுற்றியே இருப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கு. ஹாலிவுட் படமான பியூட்டிஃபுல் மைண்ட் படத்தில் ஒரு கதாபாத்திரம் கூடவே அந்த கணக்கு வாத்தியாரை டார்ச்சர் செய்யும். அதே காட்சியை தனுஷின் ‘3’ படத்திலும் வைத்திருப்பார்கள். இந்த படத்தில் ஆனந்த் ராஜ், சியான் விக்ரமின் சிறுவன் போர்ஷன், இன்னொரு ஆள் என மூவர் எப்போதுமே சுற்றி வந்து அவனுக்கு ஏகப்பட்ட ஆர்டர்களை போட்டு வருகின்றனர்.
வில்லனான பாலிவுட் நடிகர்
இமைக்கா நொடிகள் படத்தில் இயக்குநர் அனுராக் கஷ்யப்பை வில்லனாக நடிக்க வைத்த அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தில் பாலிவுட் நடிகர் ரோஷன் மேத்யூவை வில்லனாக மாற்றி உள்ளார் ரிஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர் இப்படியொரு பிரில்லியன்ட்டாக கொலைகளை செய்பவன் யார் என்பதை தேடி கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஹைலைட். இன்டர்போல் அதிகாரியாக இர்ஃபான் பதானும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். டப்பிங் பிரச்சனை நல்லாவே தெரியுது.
கணக்கு vs கம்ப்யூட்டர்
முதல் பாதி நகர்ந்த அளவுக்கு இரண்டாம் பாதி இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இரண்டாவது பாதியில் அந்த போலீஸ் ஸ்டேஷனில் அனைத்து ஆலுசினேஷன் கதாபாத்திரங்களும் விக்ரமுக்கு முன்னதாக வந்து பேசும் காட்சி கூஸ்பம்ப்ஸ் கொடுத்தாலும், அதற்கு பிறகு கணக்கு vs கம்ப்யூட்டர் என வரும் ஒரு கதை ஆரம்பத்தில் கொடுத்த சர்ப்ரைஸை கொஞ்சம் நேரம் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாமல் சொதப்பி எடுத்து விடுகிறது. அதிலும் அந்த கிளைமேக்ஸ் காட்சியெல்லாம் என்னடா நடக்குது ஒன்னுமே புரியலையேன்னு மண்டையை போட்டுக் குழப்புகிறது.
பிளஸ்
அஜய் ஞானமுத்துவின் ட்விஸ்ட்டுகள் நிறைந்த திரைக்கதை மற்றும் படத்துக்காக பல லைவ் லொகேஷன்களுக்கு சென்று அவர் போட்டிருக்கும் உழைப்பு தெளிவாக தெரிகிறது. சியான் விக்ரம் எந்தவொரு கெட்டப் போட்டாலும் அதில் பர்ஃபெக்ட்டாக நடித்து ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றும் காஸ்டிங் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் கேமரா மூலம் சில காட்சிகளில் ரசிகர்களின் மண்டையை குழப்புவது, புவன் ஸ்ரீனிவாசனின் எடிட்டிங் கட்ஸ் என படம் மிரட்டுகிறது. மேக்கப் மேன்களின் உழைப்பும் அளப்பரியது.
மைனஸ்
பெரிய படம் என்பதால் 3 மணி நேரத்துக்கு மேல் இழுத்து விட்டது சில இடங்களில் லேக் அடிக்க வைத்து விடுகிறது. ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஏற்கனவே பார்த்த மன்மதன், தடம் படத்தை நினைவுப்படுத்துகிறது. அம்மா சென்டிமென்ட் காட்சிகள் மீண்டும் கேஜிஎஃப் படத்துக்கே அழைத்துச் செல்கிறது. சில இடங்களில் லாஜிக் ஓட்டைகளை தவிர்க்க முடியாமல் இயக்குநர் இரண்டாம் பாகத்தில் திணறியுள்ளார். இப்படி பல பிர்ச்சனைகள் படத்திற்கு மைனஸாக மாறினாலும் சியான் விக்ரமின் நடிப்பு அதையெல்லாம் மறக்கடிக்க செய்கிறது. தாராளமாக கோப்ரா படத்தை ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்!