சென்னை: கழுகு திரைப்படம் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் கிருஷ்ணா.
தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியுமான கிருஷ்ணா கழுகு, யாமிருக்க பயமேன், யட்சன், மாறி 2 போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டியில் மைனா திரைப்படம் தனக்கு வந்த கதை என்று கூறி அதில் ஏன் தான் நடிக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.
மைனா
மைனா திரைப்படத்திற்கு முன்பு இயக்குனர் பிரபு சாலமன் ஆறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதில் அர்ஜுன், விக்ரம் போன்றவர்கள் நடித்துள்ளார்கள். கரண் நடித்திருந்த கொக்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் மைனா திரைப்படம்தான் அவரை மக்கள் மத்தியில் அதிகம்பிரபலமாக்கியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக ஹிட் பாடல்களுடன் அவரது திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கதை கேட்ட கிருஷ்ணா
அலிபாபா, கற்றது களவு என்கிற இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா அதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி, இருவர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களும் தோல்வி அடைந்த சமயத்தில்தான் பிரபு சாலமன் மைனா திரைப்படத்திற்காக இவரை வரவழைத்து பேசியுள்ளார். இருவருமே பெரிய வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த காலம் அது.
கிருஷ்ணாவின் பாணி
வழக்கமாக ஒரு இயக்குனர் கதை சொல்லி அது தனக்கு பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்ல மாட்டாராம். இந்தக் கதை எனக்கு செட் ஆகுமா என்று தெரியவில்லை என்று கூறுவாராம் அல்லது இந்தக் கதையில் இந்தந்த மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவாராம். மைனா திரைப்படத்திற்காக பிரபு சாலமன் அழைத்தபோது ஒருமுறை கதை என்னிடம் கூற முடியுமா கூறினால் அதற்கு ஏற்றார் போல நான் ஹோம் வொர்க் செய்வேன் என்று கிருஷ்ணா கூறினாராம்.
அதிர்ச்சியான கிருஷ்ணா
அதற்கு பிரபு சாலமன், சரி ஓகே இன்னொரு நாள் கதை சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தாராம். சிறிது நாட்களில் விதார்த்தை கதாநாயகனாக வைத்து அந்தப் படம் அறிவிக்கப்பட்டது. ஏன் தான் நிராகரிக்கப்பட்டேன் என்கிற காரணம் இன்றுவரை தனக்கு தெரியவில்லை என்று கிருஷ்ணா கூறியுள்ளார். அதற்குப் பிறகுதான் கழுகு படத்தில் வெற்றியை கண்டார். அவருடைய போதாத காலம் கழுகு படத்தில் பிணம் தூக்குபவராக நடித்து வெற்றி பெற்றதால் தொடர்ச்சியாக அதே போன்ற கதாபாத்திரங்கள் மட்டும்தான் வருகிறதாம். ஒரு முறை ஒரு நபர் கதை சொன்னாராம். பழனி கோவிலுக்கு ஏறிச் செல்லும் வழியில் ஒரு பப்ளிக் டாய்லட் இருக்கிறது. அதில் வேலை செய்பவர்தான் நீங்கள் என்று ஒருவர் கதை கூறியதாக கிருஷ்ணா கூறியிருக்கிறார்.