மாஸ்கோ: சோவியத் யூனியன் கடைசி அதிபரான மிக்கைல் கோர்பசேவ் இன்று காலமானார். இவரது வாழ்க்கை மற்றும் அதிபராக இருந்தபோது எடுத்த முக்கிய முடிவுகளும், அதனால் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் பார்க்கலாம்.
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவாக உருவானது சோவியத் யூனியன். லெனின், ஸ்டாலின் காலத்தில் கட்டமைக்கப்பட்டது சோவியத் ஒன்றிய கூட்டமைப்பில் சுமார் 15 நாடுகள் இடம்பெற்றிருந்தன.
உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக சோவியத் ஒன்றியம் இருந்தது. அதன் கடைசி அதிபராக 1985ம் ஆண்டு பொறுப்பேற்றவர் மிக்கைல் கோர்பசேவ். 1931ம் ஆண்டு ரஷ்யாவின் தெற்கில் ஸ்டாவ்ரோபோல் என்ற இடத்தில் பிரிவோல்யே கிராமத்தில் பிறந்தார். 1955ம் ஆண்டு மாஸ்கோ பல்கலைக்கழக சட்ட கல்லூரியில் பட்டம் பெற்று, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்.
அதிபராக பதவியேற்பு
தொடர்ந்து 1980ம் ஆண்டு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் போலிட்பீரோவின் முழு உறுப்பினரான இவர், 1985 கம்யூனிஸ்ட் கட்சியின் போலிட்பீரோவின் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சோவியத் அதிபராக 1985ம் ஆண்டு பொறுப்பேற்ற இவரது ஆட்சிக் காலத்தில் சோவியத் யூனியனில் பல்வேறு சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.
முக்கிய முடிவு
சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடுகள் பிரிந்து செல்லும் உரிமையையும் கோர்பசேவ் அனுமதித்தார். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. இதன் விளைவாக 1991-ல் சோவியத் ஒன்றியம் என்கிற கட்டமைப்பு கலைந்து போய் அதில் இடம்பெற்றிருந்த உக்ரைன், லிதுவேனியா உள்ளிட்ட 15 நாடுகள் சுதந்திர நாடுகளாகின. இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது.
பொருளாதார பிரச்சனை
1991ம் ஆண்டு சோனியத் யூனியனில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை குறைவு, அந்த பொருளாதாரத்தில் மறைமுகமான தாக்கங்களை ஏற்படுத்தின. இதனால் பணவீக்கம் மற்றும் விநியோகப் பற்றாக்குறை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டது. இதனால் சோவித் யூனியனை மீண்டும் பழைய சூழலுக்கு கொண்டு வரும் நோக்கில், பெரெஸ்ட்ரோயிகா என்ற பெயரில் மறுசீரமைப்பு பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை கோர்பசேவ் தொடங்கினார்.
குறிப்பாக சிறு வணிகங்களை அனுமதிப்பது, பத்திரிகை, ஊடகம் மற்றும் கலை சமூகத்திற்கு கலாச்சார சுதந்திரம் வழங்கப்பட்டது. அரசாங்க எந்திரத்தின் மீதான கட்சி கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் தீவிர சீர்திருத்தங்களை அவர் செய்தார். அவரது ஆட்சியின் போது ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது எதிர்ப்பாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விலை உயர்வ்
ஆனாலும் அவரது பொருளாதாரக் கொள்கைகள் உறுதியற்றவையாக இருந்தன. எண்ணெய் விலையின் வீழ்ச்சியுடன் சேர்ந்து, அதிக பணவீக்கத்தை ஏற்படுத்தின. உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் அரசு கடைகளில் இருந்து காணாமல் போயின. அதனால் தனியார் கடைகள் மற்றும் சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன.
ராஜினாமா
1987ம் ஆண்டு அமெரிக்காவோடு முக்கிய அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இவர், 1989 – 1990 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் இடிப்புக்கு, பிறகு ஜெர்மனி ஒன்றாக இணைவதற்கு ஒப்பு கொண்டார். இதனால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கியவர் என்றும், ஜெர்மனி ஒன்றிணைய அனுமதித்தவர் என்றும் கோர்பச்சோவ் மேற்குலகில் பலர் கதாநாயகனாக பார்க்கின்றனர்.
ஆனால், சொந்த மண்ணில் பலரும் அவரை பேரரசை இழந்த தலைவராக பார்க்கின்றனர். 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் ஆட்சிக் கவிழ்ப்பில் கைதான இவர், அதே ஆண்டு டிசம்பர் மாதம் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.