திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான நிலையத்தில் பணிபுரியும் மலப்புரம் வாழயூர் பகுதியை சேர்ந்த சஜிதா (46) என்ற தூய்மை பிரிவு கண்காணிப்பாளர் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மெட்டல் டிடெக்டர் கேட் வழியாக சஜிதா சென்ற போது பீப் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரை பரிசோதித்து பார்த்தனர். அப்போது ஆடைக்குள் 1.812 கிலோ தங்க கலவையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ.80.52 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சஜிதாவை அதிரடியாக கைது செய்தனர். துபாயில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த ஒருவர் அதை கழிப்பறையில் மறைத்து வைத்து உள்ளார். அந்த தங்கத்தை சஜிதா ஆடைக்குள் மறைத்து வைத்து வெளியே கொண்டு சென்று கடத்தல்காரர்களிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.