இந்து மதத்துக்கு எதிரான திராவிடர் கழக மாநாட்டை தடை செய்ய வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “திருவாரூரில் செப்டம்பர் 4-ம் தேதியன்று நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திருவாரூரில் செப்டம்பர் 4-ம் தேதியனறு சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தப்போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. சனாதனம் என்பது இந்து மதத்தையே குறிக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதாவது இந்து மதத்தையும், இந்து மத நம்பிக்கைகளையும், இந்து கடவுள்களையும் இழித்தும், பழித்தும், பேசுவதற்காகவே இந்த மாநாடு என்பதும் இதில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்க போவதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் மத மோதல்களை ஏற்படுத்துவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனியும் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடம் அளிக்க முடியாது. அப்படி முயலுவோர் சட்டத்தின்படி தண்டனையை அனுபவிக்கும் சூழலை இந்த அரசு உருவாக்கும் என்று கடந்த மே மாதம் 10-ம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் கூறியது போல், வரும் 4-ம் தேதி திருவாரூரில் மத துவேஷத்தை பரப்பி, மத மோதல்களை உருவாக்க திராவிடர் கழகம் மற்றும் சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெளிவாக தெரிகிறது. சட்டசபையில் முதல்வர் சூளுரைத்தது போல், மத உணர்வுகளை புண்படுத்த முற்படும் இந்து மத எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். தமிழக காவல்துறை இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.