அமெரிக்கா 1960-ம் ஆண்டிலிருந்து போர்க்களத்தில் பயன்படுத்திவரும் சினூக் ஹெலிகாப்டர்களை முழுமையாக தரையிறக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்ஜினில் அடிக்கடி கோளாறு காரணமாக தீப்பிடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கர் தனது சினூக் ரக ஹெலிகாப்டர்களை தரையிறக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிடம் மொத்தம் 400 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. அதே சமயம் இந்தியாவிடம் 15 CH-47 சினூக் ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. இந்தியாவில் சினூக் ஹெலிகாப்டர்களின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.
லடாக், சியாச்சின் பனிப்பாறை போன்ற இடங்களில், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான முக்கிய இராணுவ கருவிகளில் ஒன்றாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா கடந்த 2019-ல் 15 சினூக் ஹெலிகாப்டர்களை விமானப்படைக்கு வாங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஹெலிகாப்டர்கள் 2020-ல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்கா சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பான முக்கிய முடிவில் இருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள், “சில சினூக் ஹெலிகாப்டர்கள் இன்ஜின் கோளாறு காரணமாக தீப்பிடித்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக விபத்தோ… உயிர் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட சினூக் ஹெலிகாப்டர்களை தரையிறக்கியிருக்கிறோம். மொத்தமுள்ள ஹெலிகாப்டர்களில் 70 சதவிகிதம் ஹெலிகாப்டர்களில் இத்தகைய பிரச்னை இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்கா தனது சினூக் ஹெலிகாப்டர்களை தரையிறக்கியிருப்பதை அடுத்து, இந்தியாவும் முன்னெச்சரிக்கையாக சினூக் ரக ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.